இலங்கையில் அரசறிவியல் பாடத்தில் தேர்ச்சியுடைய ஆசிரியர்களினால் உருவாக்கப்படுகின்ற குறிப்புகள், புத்தகங்கள், வழிகாட்டி நூல்கள் போன்றன இத்தளத்தில் பதிவேற்றப்படும்.

அரசாங்கத்தின் வகைப்பாடுகள்

அரசாங்கத்தின் வகைப்பாடுகள், அரிஸ்ரோட்டலின் அரசு பற்றிய வகைப்பாடு, Political notes, Advance leval political notes, Poltical Science, Sri lanka politic

 

அரசாங்கத்தின் வகைப்பாடுகள்

அரசியல் சிந்தனையாளர்கள, கோட்பாட்டாளர்கள் ஆகியோர்களால் அரசியல் முறைமைகள் தொடர்பாக வியாக்கியானம் பல கொடுக்கப்பட்டுள்ளன. புராதன காலத்தில் பிளேட்டோ ( Plato ) அரிஸ்ரோட்டில் ( Aristotle ) பொலிபியஸ் ( Polybius ) இம்முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆயினும் கிரேக்க காலத்தில் அரசு அரசாங்கம் என்பவற்றிற்கு இடையில் வேறுபாட்டினை வெளிப்படுத்தக் கூடிய வியாக்கியானங்களை இவர்களால் முன்வைக்க முடியவில்லை. இவர்கள் தமது பணிகளை அரசுகளின் வகைப்பாடு (Classification of states ) என அழைத்தார்கள். அரசு, அரசாங்கம் ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடு தற்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறான வேறுபாடுகளை தற்காலத்தில் நாம் அரசாங்கத்தின் வகைப்பாடுகள் (Classification of government ) என அழைக்கலாம்.

எல்லா அரசுகளும் சாராம்சத்தில் ஒத்த தன்மை கொண்டவைகளாகும். ஆனால் இவைகள் ஒவ்வொன்றும் உருவாக்கிக் கொள்ளும் அரசாங்க வடிவத்தினைப் பொறுத்து வேறுபாடு கொண்டவைகளாகக் காணப்படுகின்றன. அரசாங்கத்தின் வகைகளை வகைப்படுத்தியவர்களுள் அரிஸ்டோட்டில் ( Aristotle ) முதன்மையானவராவார். இவரின் பின்னர் பலர் அரசாங்கத்தினை வகைப்படுத்திகாட்டியிருந்தாலும் அவர்களுள் ரூசோ (Rousseau ) மொண்டஸ்கியு (Montesquieu ) பிளன்சிலி ( Bluntschli ) வொன் மோல் மேரியட் ( Von mohl marriot ) ஸ்டீபன் லீகோக் ( Stephen Leacock ) போன்றவர்கள் முதன்மையானவர்களாகும். இவர்களில் அனேகர் அரிஸ்டோட்டிலின் வகைப்பாட்டினை அடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். சிலர் தற்காலத்திற்கு பொருந்தக் கூடிய வகைப்பாடுகளை மேற்கொள்வதற்கு முயற்சி செய்கின்றார்கள்.

அரிஸ்ரோட்டலின் அரசு பற்றிய வகைப்பாடு

அரசியல் நிறுவனங்களை வகைப்படுத்துகின்ற வரலாறானது புராதன கிரேக்கத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. அரிஸ்டோட்டில்அரசியல் நிறுவனங்களை வகைப்படுத்துவதில் முன்னோடியாக இருந்துள்ளார். இவர் அரசியல் நிறுவனங்களுக்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்களை கொடுக்கின்றார். ஆனால் அரசு அரசாங்கம் ஆகிய இரண்டு பதங்களுக்கும் இடையிலான வேறுபாட்டினை தெளிவுபடுத்த இவர் தவறி விட்டார். அவருடைய வகைப்பாட்டினை அவர் அரசுகளின் வகைப்பாடு (Classification of study ) என அழைக்கின்றார். அரிஸ்டோட்டிலின் அரசாங்க வகைப்பாடுகள் அடிப்படையில் இரண்டு பிரதான பண்புகளைக் கொண்டதாககும்.

1. ஆளும் அதிகாரத்தினை வைத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை

2. அரசினுடைய இலக்கு ( End of the state )

அதிகாரத்தினை வைத்திருத்தல் என்பது அரிஸ்டோட்டிலின் வாதத்தின் படி அரசாங்க முறையில் ஒருவராட்சி, சிலராட்சி, பலராட்சி பண்புகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இவர்கள் வெளிப்படுத்தும் அதிகாரமானது ஒன்றில் நல்லதாக அல்லது தீயதாக ( Good or Bad ) அமையலாம். நல்ல ஆட்சியினை கொண்ட அரசானது அரிஸ்டோட்டிலின் வாதத்தின்படி பொது நோக்கு அல்லது பொது நலனிற்காக ஆளும் அதிகாரம் பயன்படுவதை குறிக்கின்றது. தீய அல்லது இயல்பிற்கு மாறான அரசானது சுய நலனிற்காக ஆளும் அதிகாரமானது பயன்படுத்தப்படுவதாக காணப்படும். இவ் இரு அடிப்படையில் ஆறு வகையான வகைப்பாட்டினை அரிஸ்டோட்டில் முன்வைக்கின்றார். இவ் ஆறுவகையான அரசுகளும் ஒருவராட்சி, சிலராட்சி, பலராட்சி ( One, Few, Many ) என்ற அடிப்படையில் நல்ல ( Normal ) ஆட்சியாக அல்லது ( Perverted ) தீய ஆட்சியாக உருவாக்கப்படுகின்றது.

நல்ல ஆட்சி ( Normal forms ) முறைமைக்குள் முடியாட்சி ( Monarchy ) உயர் குடியாட்சி ( Aristocracy) Polity என்பன உள்ளடக்கப்படுகின்றது. தீய அல்லது இயல்பிற்கு மாறான ( Perverted forms ) ஆட்சி முறைமைக்குள் கொடுங்கோண்மையாட்சி ( Tyranny ) சிறு குழு ஆட்சி ( Oligarchy ) மக்களாட்சி ( Democracy )என்பன உள்ளடக்கப்படுகின்றது.

ஏனையவர்களின் வகைப்பாடு

ரூசோ அரசாங்கத்தினை மன்னராட்சி ( Monarchies ) உயர் முடியாட்சி ( Aristocracies ) மக்களாட்சி ( Democracies ) என மூன்றாக அரசாங்கத்தை வகைப்படுத்துகின்றார். மேலும், உயர் குடியாட்சியை மேலும் மூன்றாக வகைப்படுத்திக் காட்டுகின்றார். இயற்கை உயர் குடியாட்சி ( Natural ), தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்குடியாட்சி ( Elective), பரம்பரை உயர்குடியாட்சி ( Hereditary ), என மூன்றாக வகுக்கின்றார்.

மொண்டஸ்கியு அரசாங்கத்தினை குடியரசு ( Republican) மன்னராட்சி ( Monarchical ) எதேச்சாதிகாரம் ( Despotic ) என மூன்றாக அரசாங்கத்தை வகைப்படுத்துகின்றார். பிளன்சிலிஅரசாங்கத்தினை மன்னராட்சி ( Monarchies ) உயர் குடியாட்சி ( Aristocracies ) ஜனநாயகம் ( Democracies ) மதகுருமார் அல்லது கடவுளின் ஆட்சி (Theocracies என நான்காக வகைப்படுத்துகின்றார்.

வொன் மோல் மேரியட் அரசாங்கத்தினை வகைப்படுத்துவதற்கு மூன்று மாதிரிகளைப் பின்பற்றுகின்றார். அவைகளாவன ஓற்றையாட்சியும் சமஸ்டியும், நெகிழும் மற்றும் நெகிழா அரசாங்கம், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற அரசாங்கம் என்பவைகளாகும்.

ஆயினும் அரசாங்கம் பற்றிய வகைப்பாடுகளை மேற்கொண்டவர்களில் ஸ்டீபன் லீகோக் பெருமளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய வகைப்பாட்டினை உருவாக்கியுள்ளனர். ஸ்டீபன் லீகோக்கின் வகைப்பாட்டினை பின்வருமாறு விளங்கிக் கொள்ள முடியும்.

image

மேற்படி வரைபடத்தில் இருந்து சில விளக்கங்களை முன் வைக்கலாம்.ஸ்டீபன் லீகோக் முதலில் அரசாங்கத்தின் வகைப்பாடுகளை எதேச்சாதிகாரம்,மக்களாட்சி என இரண்டாக வகைப்படுத்துகின்றார்.

எதேச்சாதிகார அரசாங்கத்தில் எல்லா அதிகாரங்களும் ஓரிடத்தில் மையப்படுத்தப்பட்டிருக்கும். ஆட்சியாளர்கள் அரசின் மிகவும் உயர்ந்த அதிகாரியாக காணப்படுவார்கள். இவ் ஆட்சியில் பொதுசன அபிப்பிராயம் என்பது கருத்தில் எடுக்கப்பட மாட்டாது. மக்களாட்சி முறைமையில் மக்களே அதிகாரத்தின் கட்டுப்படுத்த முடியாத சக்திகளாக காணப்படுவார்கள். மக்கள் தங்களுடைய அதிகாரத்தினை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்த முடியும். மறைமுக ஜனநாயகத்தில் இரண்டு வகை ஜனநாயகமுறைமைகள் காணப்படுகின்றன. அவைகளாவன ஒன்று மட்டுப்படுத்தப்பட்ட மன்னராட்சி இரண்டாவது குடியரசு ஆகும்.

வரையறுக்கப்பட்ட மன்னராட்சி ( Limited monarchy ) என்பது பரம்பரை ( Hereditary ) மன்னராட்சியாக காணப்படும். இங்கு மன்னனே ஆட்சியாளனாக காணப்படுவார். ஆனால் அவர் சட்டமியற்றுவதில்லை. குடியரசு ( Republic ) அரசாங்கமுறைமை மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைமைத்துவத்தினை கொண்டதாக காணப்படும். மட்டுப்படுத்தப்பட்ட மன்னராட்சியும், குடியரசு ஆட்சியும் ஓற்றையாட்சி, சமஸ்டியாட்சி என இரண்டாக பிரிக்கப்படுகின்றது.

ஓற்றையாட்சி அரசாங்கம் ஒரு மத்திய அரசாங்கத்தினை மட்டும் கொண்டதாக காணப்படும். சமஸ்டியாட்சி அரசாங்கம் மத்திய, மாநில அரசாங்கம் என்ற இரண்டு அரசாங்கங்களை கொண்டிருக்கும். ஓற்றையாட்சி, சமஸ்டியாட்சி அரசாங்கங்கள் இரண்டும் பாராளுமன்றம் சார்ந்த, பாராளுமன்றம் சாராத அரசாங்கம் என இரண்டு பிரிவுகளை கொண்டு காணப்படும்.

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget