இலங்கையில் அரசறிவியல் பாடத்தில் தேர்ச்சியுடைய ஆசிரியர்களினால் உருவாக்கப்படுகின்ற குறிப்புகள், புத்தகங்கள், வழிகாட்டி நூல்கள் போன்றன இத்தளத்தில் பதிவேற்றப்படும்.

அரசு பற்றிய பாசிசக் கோட்பாடு

அரசு பற்றிய பாசிசக் கோட்பாடு, பாசிசத்தின் இயல்புகள், Political notes, Advance leval political notes, Poltical Science, Sri lanka political, sri lanka

 

அரசு பற்றிய பாசிசக் கோட்பாடு

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தீவிர அரசியல் சித்தாந்தங்களுக்குள் பாசிசமும் ஒன்றாகும். பாசிச சித்தாந்தத்தின் தந்தையாக இத்தாலியின் சர்வாதிகாரியாகிய பெனிடோ முசோலினி (Benito Mussolini ) கருதப்படுகிறார். 1922 ஆம் ஆண்டு முசோலினையும் அவரது பாசிசக் கட்சியும் இத்தாலியில் பதவிக்கு வருவதோடு பாசிசக் கோட்பாடும் ஆரம்பமாகிறது. 1933ஆம் ஆண்டு ஜேர்மனியில் பதவிக்கு வரும் சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லர் (Adolph Hitler ) முசோலினியை பின்பற்றி நாசிசம் (Nazism ) என்ற பெயரில் பாசிசக் கோட்பாட்டை உருவாக்கினார். இத்தாலியில் பாசிசம் இத்தாலியின் பண்புகளையும் ஜேர்மனியில் நாசிசம் ஜேர்மனியின் பண்புகளையும் மையமாக கொண்டிருந்தது. சர்வாதிகார சித்தாந்தத்தினை பின்பற்றின என்பதே இவை இரண்டிற்கும் இடையிலான பிரதான ஒற்றுமையாகும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரான்சிலும், பெல்ஜியத்திலும் பாசிச அமைப்புக்கள் காணப்பட்டிருந்தன. ஆனாலும் பாசிசம் என்பது இத்தாலியில் முசொலினியால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட தத்துவத்தினையே குறித்து நிற்கிறது.

பாசிச தத்துவத்தின் மூலகங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தீவிர தத்துவங்களிலிருந்து பெறப்பட்டதாகும். எடுத்துக்காட்டாக நீட்சேயின் ( Nietzsche அதிமானுடன்( Superman ) என்ற அதிகாரக் கோட்பாட்டினாலும் சொரல் (Sorel இன் பலாத்காரக் கோட்பாட்டினாலும் ஹெகல் (Hegel )இன் அரசை மேம்படுத்தும் வாதங்களினாலும் பாசிசம் பெருமளவிற்கு வளர்ந்திருந்தது அத்துடன் மாக்கியவல்வியின் கருத்துக்களாலும் முசொலினி கவரப்பட்டிருந்தார்.

பாசிசம் என்ற சொல் பாஸ்சியோ (Fascio )அல்லது பாஸ்சி (Fasci ) என்ற இத்தாலிய சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இத்தாலிய சொல்லாகிய Fascio என்பதற்கான பொருள் இறுக்கமாக கட்டப்பட்ட தடிக்கட்டு (well tied bundle of nods ) என்பதாகும். பாசிசம் இத்தாலிய இராணுவத்திற்குள் ஐக்கியம், பலம், ஒற்றுமை என்பவற்றை இறுக்கமாக ஏற்படுத்த முயலுகிறது. புராதன உரோமானிய இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட கோடரிச் (Axe) சின்னமே பாசிச இராணுவத்தின் சின்னமாக பயன்படுத்தப்பட்டது.

தோற்றமும் பின்னனியும்

முதலாம் உலகப் போரின் பின்னர் வெற்றி பெற்ற நாடுகளுக்கும் தோல்வியடைந்த ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே வேர்சைல்ஸ் (Versailles ) உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இவ் உடன்படிக்கை வெற்றி பெற்ற நாடுகளுக்கு சாதகமாகவும் தோல்வியடைந்த நாடுகளுக்கு பாதகமாகவும் அமைந்தது. இவ் உடன்படிக்கை இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தேசிய நலன் தேசிய கௌரவம் போன்றவற்றிற்கு பெரும் சவாலாக மாறியது.

வேல்சயில் உடன்படிக்கையினைப் பயன்படுத்தி நேசநாடுகள் இத்தாலியையும் ஜேர்மனியையும் பல கூறுகளாகப் பிரித்ததுடன் பல பிரதேசங்களை தமதாக்கிக் கொண்டன. இத்தாலியினதும் ஜேர்மனியினதும் குடியேற்றங்கள் பாதிக்கப்பட்டன. அத்துடன் பெருந்தொகைப் பணத்தினை நஸ்ட ஈடாக நேச நாடுகளுக்கு வழங்க வேண்டும் எனவும் கூறியது.

யுத்தத்தின் தோல்வியினால் அவமானமும் வெட்கமும் அடைந்திருந்த இவ் இருநாடுகளுக்கும் வேல்சயில் உடன்படிக்கை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. வேலையில்லாப் பிரச்சினை, பணவீக்கம் என்பன பெரும் பொருளாதார பிரச்சினைகளை தோற்றுவித்தன. இப்பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய நிலையில் இந்நாடுகளின் அரசாங்கங்கள் காணப்படவில்லை.

ஆட்சியாளர்கள் நேச நாடுகளின் கைப்பொம்மைகளாகவே காணப்பட்டனர். இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள் வர்த்தகர்கள், படை வீரர்கள் போன்ற பல்வேறு பிரிவினர்களிடமும் அதிருப்தி ஏற்பட்டது. இக்காலத்தில் இவ் இரு நாடுகளிலும் சோசலிஜ்ட்டுகள் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தார்கள். இச் சூழ்நிலையினை முசொலினையும் கிட்லரும் நன்கு பயன்படுத்தத் தொடங்கினர்.

தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களாலோ சோசலிஸ்ட்டுக்களாலோ முடியாது என பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். முசொலினியின் பிரச்சாரம் பிரச்சினைகளுடன் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு முசோலினி மீது நம்பிக்கையினை ஏற்படுத்தத் தொடங்கியது. முசோலினிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தொழிலாளர்கள் எழுச்சியை முறியடிக்க ஏனைய வர்க்கத்தினர் முற்பட்டனர்.

சகல பிரிவினரதும் ஆதரவைப் பெற்றுக் கொண்ட முசோலினி இத்தாலியின் பண்டைய பெருமைகளையும் வரலாறுகளையும் மக்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் கலாசார மேன்மைகளுக்கு புத்துயிரளிக்கப் போவதாக உறுதியளித்தார். தமது முன்னோர்களின் வீரதீர செயல்களை விளக்கி தேசிய உணர்வுகளை மக்களுக்கு ஊட்டினார். ஓருதலைப்பட்சமான வேல்சயில்ஸ் உடன்படிக்கை கிழித்தெறியப்பட வேண்டும். நேச நாடுகள் வஞ்சம் தீர்க்கப்படல் வேண்டும் எனப் பிரச்சாரம் செய்தார். தாம் அனுபவித்து வந்த பல்வேறு விதமான பிரச்சினைகள் மன உழைச்சல்களிலிருந்து விடுபட விரும்பிய மக்கள் முசொலினியை தேசியத் தலைவராக ஏற்றுக் கொண்டனர். ஆனால் அதிகாரத்தை கைப்பற்றியதும் மக்கள் அபிப்பிராயங்களையோ சர்வதேச நியதிகளையோ மதிக்காத சர்வாதிகாரியாக இவர் பின்னர் மாறினார்.

பாசிசத்தின் இயல்புகள்

பாசிசம் அதிகாரம் மிக்க ஒரு தலைவனையும் அத்தலைவனை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்கள் கூட்டத்தினையும் கொண்ட அரசாங்க முறையாகும். இது அகிம்சை, சமாதானம், சோசலிசம், ஜனநாயகம், தனிமனித வாதம் என்பவற்றை நிராகரிக்கின்றது. பொய், பகட்டு, அடக்குமுறை, சந்தர்ப்ப வாதம், அதிகார ஆசை, போர் வெறி போன்றவற்றில் நம்பிக்கை கொண்டதோர் தத்துவமாகும்.

பாசிஸ்ட்டுக்கள் தங்கள் கோட்பாடுகளுக்கு தெளிவான விளக்கங்களை முன்வைப்பதில்லை. கோட்பாட்டை விட செயற்பாட்டிலேயே நம்பிக்கை கொண்ட இவர்கள் செயற்பாட்டினை நியாயப்படுத்த கோட்பாட்டை உருவாக்குபவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கோட்பாட்டையும் செயற்பாட்டையும் மாற்றியமைத்துக் கொள்பவார்கள்;. நம்பு, கீழ்படி, போர்புரி என்பதே இவர்களின் உபதேசமாகும். மிகவும் உறுதியாக மையப்படுத்தப்பட்ட அதிகாரம், எதிர்க் கட்சியில்லாமை, விமர்சனம் இல்லாமை, தேசத்தின் எல்லா விடயங்கள் மீதான கட்டுப்பாடு, ஆக்கிரமிப்புத் தேசியவாத உணர்வு, கம்யூனிச எதிர்ப்பு போன்ற பண்புகள் இவர்களிடம் காணப்படுகிறது.

பாசிசம் அரசை மேன்மைப்படுத்தும் தத்துவமாகும். அரசுக்காக மக்களேயன்றி மக்களுக்காக அரசு இல்லை என இவர்கள் கூறுகின்றார்கள். இதன் மூலம் ஜனநாயகத்தினை பாசிசம் நிராகரிக்கிறது. பாசிசம் தனியொரு கட்சியை கொண்ட ஒரு ஆட்சி முறையாகும். பாசிசவாதிகள் தமது கட்சி அங்கத்தவர்களை இராணுவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

பாசிசம் சர்வ அதிகாரங்களும், சர்வ வல்லமையும் கொண்ட தனியொரு ஸ்தாபனமாக அரசை உருவாக்குகின்றது. முசோலினி தனது பாசிசக் கோட்பாடு பற்றி பின்வருமாறு கூறுகின்றார். “எல்லாம் அரசிற்குள்ளேயே இருக்கிறது. அரசிற்கு எதிராக அரசிற்கு உள்ளேயும், வெளியேயும் எதுவும் இல்லை. பாசிச அரசில் வெகுஜன தொடர்பு சாதனங்கள், கல்வி முறைமைகள் அனைத்தும் அரசின் பூரண கட்டுப்பாட்டிலிருக்கும். இவைகளினூடாக பாசிசம் தனது பிரச்சாரங்களைத் திட்டமிட்டு மேற்கொள்ளும். பாசிசத்தில் பலாத்காரம் என்பது நிரந்தரமானதாகும். அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், வளர்ப்பதற்கும் எதிரிகளை ஒழிப்பதற்கும், பலாத்காரமே தேவையாகும். இரகசிய பொலிஸ் பிரிவின் மூலம் எதிரிகளை இனம் கண்டு இராணுவ நீதிமன்றங்களுடாக கடுமையான தண்டனை வழங்கி பலாத்கார ஆட்சி நடாத்தப் படவேண்டும்.

பாசிசம் தனிமனிதனையோ சமூகங்களையோ மதிப்பதில்லை. தனிமனிதன் அரசிற்கு அடிபணிய வேண்டும். தனிமனிதன் தனது உரிமைகளை வலியுறுத்தாமல் சமூகக் கடமைகளில் அக்கறை காட்ட வேண்டும். தனிமனிதனை அறிவாளியாகவோ ஆற்றல் மிக்கவனாகவோ ஆளத்தகுதியானவனாகவோ பாசிசம் கருதுவதில்லை. இதன் மூலம் பாசிசம் உயர்குழாம் ஆட்சியை வலியுறுத்துகிறது. மாக்சிசம் கூறும் இருவர்க்கக் கோட்பாட்டிற்கு மாறாக பலவர்க்கக் கோட்பாட்டினை முன்வைத்து சமுதாயத்தில் பல வர்க்கங்கள் உள்ளன என கூறுகிறது. சமுதாயத்தில் வர்க்கப் பிரிவுகள் தவிர்க்க முடியாது நிலை பெற்றுள்ளது எனப் பாசிசம் கூறுகிறது.

பாசிச அரசு இனவாதத்தை முதன்மைப்படுத்தும் ஒன்றாகவுள்ளது. நோர்டிக் எனப்படும் கலப்பற்ற தூய ஆரிய இனத்தை முதன்மைப்படுத்துகிறது. ஆரிய இனத்தின் தனித்துவமும் கலாசார மேன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருவனை மதிப்பீடு செய்வதற்கு அவன் பிரதிநிதித்துவம் செய்யும் இனமே தகுந்த அளவு கோல் ஆகும். ஆரிய இனமே உலகில் தலை சிறந்த இனம். அவர்களே உலகை ஆளப்பிறந்தவர்கள். ஏனைய இனங்கள் அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். யூத இனத்தை கலப்பு இரத்தத்தில் உருவாகியவர்கள் என பாசிசம் இழிவுபடுத்துகிறது. ஆரிய இனத்தின் தூய்மையினையும் மகிமையினையும் பேணும் நோக்கில் யூதர்கள் படுகொலை செய்யப்பட வேண்டும் எனப் பாசிசம் கூறுகிறது.

சர்வதேச மட்டத்தில் ஏகாதிபத்திய கோட்பாட்டை பாசிசவாதிகள் ஏற்றுக் கொண்டார்கள். ஏகாதிபத்திய இலக்கினை அடைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இதற்காக யுத்தத்தினையும் பலாத்காரத்தினையும் நம்பினார்கள். போர் பிரியர்களாகிய இவர்கள் வரலாற்றில் எதுவுமே இரத்தம் சிந்தாமல் வெல்லப்படவில்லை என்ற கருத்தில் நம்பிக்கை கொண்;டவர்களாகும். முசோலினி இது தொடர்பாக கூறும் போது சமாதானமாக வாழ்நாள் முழுவதும் வாழ்வதை விட போர்க்களத்தில் செலவிடும் ஒரு நிமிடம் மேலானது. ஏகாதிபத்தியம் என்பது வாழ்வின் நிலையானதும் மாற்ற முடியாததுமான விதியாகும் என்கின்றார். சமாதானத்தினை நிராகரிக்கின்ற இவர்கள் சமாதானம் என்பது நிலையானதோ நடைமுறைச் சாத்தியமானதோ அல்ல என்கிறார்கள். உலக சமாதானம் ஒரு கோழையின் கனவு எனக் கூறும் இவர்கள் பிறநாடுகளை படைபலத்தால் கைப்பற்றி ஏகாதிபத்தியக் கொள்கையினை நிலைநாட்டுவதிலேயே தமது தனித்துவம் தங்கியிருக்கிறது என்கிறார்கள்.

விமர்சனம்

பாசிசத்தினை ஒரு தத்துவமாக ஏற்றுக் கொள்ள முடியுமா என்ற வாதப்பிரதிவாதங்கள் காணப்படுகின்றன. ஒரு தத்துவம் எனக் கூறுவதை விட அரசியல் சந்தர்ப்ப வாதம் எனக்கூறுவதே பொருத்தமானதாகும். அதிகார வெறிபிடித்த தலைமைத்துவம் தனது அமைப்பின் நலனை நோக்கமாக கொண்டு செயற்படுகிறது. இதன் மூலம் ஜனநாயக தத்துவம் செயலிழக்கச் செய்யப்படுகிறது. தனிமனித சுதந்திரம், எதிர்கருத்துக்கள் சுதந்திரமான நீதித்துறை செயற்பாடு என்பன தடை செய்யப்பட்டன. தேர்தல்கள் என்பதற்கோ மக்கள் அபிப்பிராயத்திற்கோ இங்கு இடமளிக்கப்படுவதில்லை. தாராண்மைவாத தத்துவம் ஜனநாயகம் தனிமனிதவாதம் என்பவற்றை பாதுகாக்க எதேச்சாதிகாரம் வரம்பற்ற ஆட்சி என்பவற்றை பாசிசம் பாதுகாக்கிறது. பாசிசம் சோசலிசத்திற்கும் எதிரானதாகும். தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமைகளை ஒடுக்கும் அதே நேரம் முதலாளித்துவத்தின் நலன்களை பாதுகாக்க முற்படுகின்றது. சர்வதேசியத்தினையும் பாசிசம் நிராகரிக்கிறது. அதே நேரம் ஆக்கிரமிப்பு தேசிய வாதத்தினை முழுமையாக அங்கீகரிக்கின்றது. யுத்தம் என்பதை அங்கீகரிக்கின்ற அதே நேரம் சமாதானத்தினை இழிவுபடுத்துகிறது. இன மேலாதிக்க கற்பனையினை ஏற்றுக் கொண்டு ஏனைய இனங்களையும் தேசியங்களையும் இழிவுபடுத்தி அழிக்க பாசிசம் முற்படுகிறது. ஆயினும் குறிப்பிட்ட காலம் பாசிசம் ஒரு தத்துவமாக செயற்பட்டதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உலகின் வரலாற்றுப் நிகழ்வினை தீர்மானித்ததில் குறிப்பிடக் கூடியளவிற்கு பங்காற்றியது. இதன் மூலம் வரலாற்றில் பாசிசம் தனக்கென ஓரிடத்தை ஒதுக்கி வைத்துள்ளது.

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget