இலங்கையில் அரசறிவியல் பாடத்தில் தேர்ச்சியுடைய ஆசிரியர்களினால் உருவாக்கப்படுகின்ற குறிப்புகள், புத்தகங்கள், வழிகாட்டி நூல்கள் போன்றன இத்தளத்தில் பதிவேற்றப்படும்.

பாராளுமன்ற அரசாங்க முறைமை

பாராளுமன்ற அரசாங்க முறைமை, பாராளுமன்ற அரசாங்க முறை வெற்றிகரமாக இயங்குவதற்குத் தேவையான சிறப்பியல்புகள் பெயரளவு நிர்வாகி, ஒருமித்த தன்மை, கூட்டுப் பொற

 

பாராளுமன்ற அரசாங்க முறைமை

ஜனநாயக அரசாங்கங்களைப் பொதுவாக பாராளுமன்ற அரசாங்க முறைமை, ஜனாதிபதி அரசாங்க முறைமை என இரண்டாக வகைப்படுத்தலாம். இவ்வகைப்பாடானது சட்ட சபைக்கும், நிர்வாகத் துறைக்கும் இடையிலான உறவின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. சட்டத்துறையும், நிர்வாகத்துறையும் கூட்டாக மக்களுக்கு பொறுப்புக் கூறக்கூடிய ஓர் அரசாங்க முறையாக பாரளுமன்ற அரசாங்க முறை உருவாக்கப்படுகின்றது. இதனை சேர். ஐவர் ஜெனிங் அமைச்சரவை அரசாங்க முறைமை என அழைக்கின்றனர். ரிச்சார்ட் குரொஸ்மென் இதனை பிரதம மந்திரி அரசாங்க முறைமை என அழைக்கின்றார்.

பாராளுமன்ற அரசாங்க முறையின் தோற்றத்தினை பிரித்தானியாவில் இருந்தே இனங்காண முடியும். பிரித்தானியாவில் காணப்படும் பாராளுமன்ற அரசாங்கமுறை பதினெட்டாம் நுற்றாண்டிலிருந்து பெறப்பட்ட அனுபவங்களினூடாக அபிவிருத்தியடைந்த ஒன்றாகும். ஆனால், இன்று பாராளுமன்ற ஆட்சி முறையினை அவுஸ்திரேலியா, பெல்ஜியம், டென்மார்க், இந்தியா, ஜப்பான், கனடா போன்ற அனேக நாடுகள் பின்பற்றுகின்றன.

1. பாராளுமன்ற அரசாங்க முறை வெற்றிகரமாக இயங்குவதற்குத் தேவையான சிறப்பியல்புகள்

பெயரளவு நிர்வாகி

பாராளுமன்ற அரசாங்க முறை இரண்டு வகையான அரசாங்க முறையினைக் கொண்டிருக்கின்றது. ஒன்று உண்மை நிர்வாகம் மற்றையது பெயரளவு நிர்வாகம். பெயரளவு நிர்வாகமானது ஒன்றில் பரம்பரையானதாகக் காணப்படலாம். அல்லது தெரிவு செய்யப்பட்டதாக காணப்படலாம். ஆனால் நிர்வாகி பெயரளவு அதிகாரங்களை மட்டுமே கொண்டவராகக் காணப்படுவார். உதாரணமாக இங்கிலாந்தில் அரசியும்;, இந்தியாவில்; ஜனாதிபதியும் பெயரளவு நிர்வாகியாக இருந்து செயற்படுவதைக் குறிப்பிடலாம்.

முழு நிர்வாகமும் பெயரளவு நிர்வாகியின் பெயராலேயே மேற்கொள்ளப்படுகின்றன. எல்லா அதிகாரங்களும் இவருடைய பெயரால் மேற்கொள்ளப்பட்டாலும், அமைச்சர்களால் இவ் அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டு பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறப்படுகின்றது. பெயரளவு நிர்வாகியே பிரதம மந்திரியை நியமிப்பவராகக் காணப்படுவார். பிரதம மந்திரியே அரசாங்கத்தின் தலைவராகக் காணப்படுவார். உண்மை நிர்வாகி உயர் நெறிப்படுத்தும் அதிகாரத்தினைக் கொண்டவராகக் காணப்படுவார் இவரே நிர்வாகத்தினை செயற்படுத்துகின்ற உண்மையான நிர்வாகியாகவும் காணப்படுவார். உண்மை நிர்வாகியின் ஆலோசனைப் படி பெயரளவு நிர்வாகி பின்வரும் கடைமைகளை மேற்கொள்ளுகின்றார்.

  • அமைச்சர்களை நியமித்தல், நீக்குதல், மாற்றியமைத்தல்
  • பாராளுமன்றக் கூட்டத் தொடர்களை கூட்டுதல், ஒத்தி வைத்தல்.
  • யுத்தம் சமாதானம் என்பவற்றை பிரகடனப்படுத்துதல்

இதனை பெயரளவு நிர்வாகியின் பெயரில் உண்மை நிர்வாகி செய்யும் அரசாங்க ஆட்சி என வரையறுக்கலாம்.

ஒருமித்த தன்மை

பிரதம மந்திரி பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையினைப் பெற்ற கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படுவார். அமைச்சரவையின் தலைவர் பிரதம மந்திரி என அழைக்கப்படுவார். அனேகமாக எல்லா அமைச்சர்களும் பிரதம மந்திரியின் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள். சில வேளைகளில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து கூட்டு அரசாங்கத்தினை அமைக்கலாம். இதனைவிட சில வேளைகளில் பிரதம மந்திரி தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் நோக்குடன், எதிர்க்; கட்சிகளில் இருந்தும் அமைச்சர்களை நியமனம் செய்வார். தேசிய முக்கியத்துவம் நிலவும் சூழ்நிலைகளில் இவ்வாறான அமைச்சரவை அமைக்கப்படுவது வழக்கமாகும்.

கூட்டுப் பொறுப்பு

பாராளுமன்ற அரசாங்க முறையில் இருக்க வேண்டிய அதிக முக்கியத்துவம் வாய்ந்த பண்பு கூட்டுப் பொறுப்பாகும். அமைச்சர்கள் தனியாகவும், கூட்டாகவும் சட்டசபைக்கு பொறுப்பானவர்களாகும். இதன் கருத்து யாதெனில், அமைச்சர்கள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே பாராளுமன்றத்தில் செயற்படுகின்றார்கள். இங்கு தீர்மானங்கள் கூட்டாக எடுக்கப்படுகின்றன. அதாவது குறிப்பிட்ட ஒரு அமைச்சின் செயற்பாடு, கொள்கை தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்ட பின் அதற்கு முழு அமைச்சரவையுமே பொறுப்பானதாகும். அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவதனால் முழு அமைச்சர்களுமே பதவி விலக வேண்டும். இதுவே கூட்டுப் பொறுப்புத் தத்துவம் என அழைக்கப்படுகின்றது.

பலமானதும் திறமையானதுமான எதிர்க்கட்சி

ஒரு கட்சி பெரும்பான்மை பலத்தை பெற்று ஆளும் கட்சியாகும் போது, ஏனைய கட்சிகள் எதிர்க்கட்சிகளாக தொழிற்படும்;. இவ்வாறான நிலை ஓர் உறுதியான ஆட்சியமைப்பிற்கு வழி விடுவதாக இருக்கும் இதனை ஆங்கிலேயர் விசுவாசம் என அழைக்கின்றார்கள். எதிர் கட்சியின் நோக்கம், ஆளுங்கட்சியின் ஏதேச்சதிகார நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதாகும். ஆளுங் கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்கட்சி ஆணைக் குழுக்களை நிறுவி விசாரணை நடத்த எதிர்கட்சிகள் முற்படலாம். இவ்வாறான சூழ்நிலைகள் தோன்றுகின்ற போது பிரதம மந்திரி அரசின் தலைவரை அழைத்து பாராளுமன்றத்தினைக் கலைத்து மக்களின் மீள் ஆணையினைப் பெறும்படி ஆலோசனை கூறலாம். சில வேளை இவ்வாறான சூழ்நிலைகள் புரட்சிகரமான சூழ்நிலைகளைக் கூட தோற்றுவித்து விடலாம்.

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget