Advance level Political Notes

இலங்கையில் அரசறிவியல் பாடத்தில் தேர்ச்சியுடைய ஆசிரியர்களினால் உருவாக்கப்படுகின்ற குறிப்புகள், புத்தகங்கள், வழிகாட்டி நூல்கள் போன்றன இத்தளத்தில் பதிவேற்றப்படும்.

Latest Post

 

அரசியல் சமூகமயவாக்கம்

மனிதன் ஒரு சமூகப் பிராணி என்று கூறிய அரிஸ்ரோட்டில் மனித இயல்பில் முக்கியமானது சோ்ந்து வாழ்தல் எனக் கூறுகின்றார். மனிதன் பிறந்ததிலிருந்து ஏனைய மனிதர்களின் அன்பிலும் அரவனைப்பிலும் வாழவே விரும்புகின்றான். அதேபோன்று குடும்பம், கிராமம் என்று சோ்ந்து வாழ்வதையும் விரும்புகின்றான். எனவே சமூகமயமாதல் என்னும் பதம் புதிதாக இருப்பினும் அதன் செயற்பாடுகள் பழையதாகும்.

ஒருவர் தான் வாழும் அரசியல் தொகுதியில் தமது அரசியல் நெறிமுறைகளையும் அரசியல் நடவடிக்கைகளையும் உணர்வு புர்வமாக அறிந்து கொள்ள உதவுவது சமூகமயமாதல் ஆகும். முதலில் ஏற்படும் சமூகமயமாதல் மூலமாகத்தான் ஏனைய அரசியல் பங்களிப்பு மற்றும் அரசியல் தொடர்பாடல் போன்றவை நிகழ்கின்றன. எனவே சமூகமயமாதல் என்பதை மிக முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் அரசறிவியலாளர்களும், சமூகவியலாளா்களும் கருதுகின்றனர்.

சமூகமயமாதல் என்பது எதனையும் முதலில் கற்றுக் கொள்ளுதல் எனப் பொருள் கொள்ளலாம்.எனவே அதனை ஓரு வாழ்க்கைக் கல்வி எனக் கூறலாம். இது ஒவ்வொருவரும் தமது சமூக நிலைமைக்கும் தகுதிக்கும் ஏற்ப கற்றுக் கொள்ளும் வாழ்க்கை எனக் கூறலாம். சமூகமயமாதல் இயல்பாகவும் சுயமாகவும் ஒவ்வொருவர் வாழ்விலும் நடைபெறுகிறது. குழந்தைப் பருவம் முதல் முதியோராகும் வரை இது தொடர்கிறது. சமூகமயமாதலின் பிரதான அம்சம் சமூகத்தோடு இணைந்து வாழப்பழகிக் கொள்ளுதலாகும். இது அரசியல் மற்றும் சமூகக் கலாசாரத்தோடு தொடர்புபட்டதாகும்.

கிறின்ஸ் என்பவர் அரசியல் சமூகமயமாதல் என்பது “சிறுவார்கள் பெரியவர்களாக வளரும் போது கற்றுக் கொள்ளும் அரசியற் சமூகக் கோட்பாடுகளும், பெரியவர்களாக வளர்ந்த பின்னர் பெற்றுக் கொள்ளும் பதவிகளுக்குத் தம்மை தயார்ப்படுத்திக் கொள்வதுமாகும்” என்று கூறுகின்றார். இது வாழ்க்கை முழுவதும் நடைபெறும் பொதுக் கல்வியாகும். அல்மன்ட் அவர்கள் அரசியல் சமூகக்கருத்துகள், சிந்தனைகள் நடவடிக்கைகளை சிறுவயதில் இருந்து அறிமுகம் செய்தலாகும். இவை பெரியவர்களாக வளர்ந்த பின்னர் சமூக மற்றும் அரசியல் பணிகளை செய்ய உதவுகிறது என்றும் கூறுகின்றார்.

அரசியல் சமூகமயமாதல் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. சமூகமயமாதல் எல்லா வித கல்வி முறைகளையும் உள்ளடக்கியுள்ளது. பாடசாலைகளில் கற்கும் கல்வி, அனுபவ ரீதியாக பெறும் அறிவு, சமூகச் செயற்பாடுகள் மூலம் பெறும் அனுபவம், அரசியல் பங்களிப்பு எனப் பல வழிகளூடாக சமூகமயமாதல் நிகழ்கின்றது. இதனால் அரசியல் நிகழ்வுகள் பற்றிய விழிப்புணர்வு, அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்ற அவா என்பன மேலோங்குகின்றது இதனால் ஜனநாயக வழிமுறைகளில் ஆர்வம் ஏற்பட்டு அரசியல் நடத்தைகளை சீராக்கிறது.

இதனை ஒரு வகையில் அரசியல் பரிவர்த்தனை என்றும் கூறலாம். சமூகத்தின் கல்வி கலாசார விழுமியங்களை ஒரு சந்ததியினர் எதிர்கால சந்ததியினருக்கு அன்பளிப்புச் செய்கின்றனர். ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்துவமான அரசியற் பின்னனிகள், நடவடிக்கைகள், சடங்குகள் என்பன இருக்கலாம். இவற்றை பாதுகாத்து வளர்த்தெடுப்பதில் அச் சமூகத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் பங்கு கொள்கின்றார்கள். இதனையே அரசியற் பரிவத்த்தனை எனக் கூறுகின்றார்கள். இதில் சமூக அங்கத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் பங்குள்ளது.அரசியற் சமூகமயமாதல் குழந்தைப்பருவம் முதல் முதியோராகும் வரையான காலங்களில் ஏற்படும் தொடர் வாழ்க்கை நிகழ்வு எனக் கூறலாம்.

டுர்கைம் (Durkheim ) என்பவர் பொதுவாக அனைத்து சமூகங்களிலும் பல்வேறுபட்ட நம்பிக்கைகள், எண்ணங்கள், உணர்வுகள், பொதுக் கொள்கைகள் என்பன உள்ளன. இவைகள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இவ்விடயங்கள் சமூகத்தில் குறிப்பிட்ட தனிமனிதர்களுக்கு மட்டுமேயுரிய ஒரு சொத்தல்ல. பதிலாக பொதுவான வாழ்க்கைக்கு உரியதாகும். இதனை டுர்கைம் பொதுவான கருத்துருவாக்கம் எனக் கூறுகின்றார்.

மீட் என்பவர் ஒரு மனிதன் தன்னைப் பற்றிய உணர்வு நிலையுடன் இல்லாவிடின் மற்றவர்களுடைய எண்ணங்கள், நம்பிக்கைகள், உணர்ச்சிகள் பிறருடைய பழக்க வழக்கங்கள் போன்றவைகள் பற்றிய உணர்வு நிலையை விளங்கிக் கொள்ளமாட்டார்கள். குழந்தை தனக்கும் பிறருக்குமிடையிலுள்ள வேறுபாட்டைக் காண்பதில்லை. வயது அனுபவங்கள் என்பவற்றின் அடிப்படையில் தனக்கும் பிறருக்குமிடையிலுள்ள வேறுபாட்டை கற்றுக் கொள்வதோடு தனது நடத்தையையும். வேறுபடுத்தி பகுத்து உணர்ந்து கொள்கின்றது எனக் கூறுகின்றார்

என் .எச்.கைமன் என்பவர் அரசியல் சமூகமயவாக்கம் என்பது 'பரம்பரை பரம்பரையாக அரசியல் பெறுமானங்கள் நிலை நிறுத்தப்படுவதாகும் எனக் கூறுகின்றார். லாஸ் வெல் என்பவர் ' 'சந்தேகத்திற்கு இடமின்றி இறந்த கால, நிகழ்கால, எதிர்கால அரசியலின் ஒவ்வொரு முக்கிய இயல்புகளையும் சமூகமயவாக்கம் முதன்மைப்படுத்துகின்றது' என குறிப்பிடுகின்றனர்.

அரசியல் சமூகமயவாக்கம் என்பது அரசியல் பெறுமானத்திலான பெறுபேறேயாகும். இது ஒரு சந்ததியிலிருந்து மறு சந்ததிக்கு மாற்றப்படுகின்றது. அரசியல் முறையின் உறுதிப்பாடென்பது அரசியல் சமூகமயவாக்கத்திலேயே தங்கியுள்ளது.

  1. அரசியல் சமூகமயமாக்க முகவர்கள்

அரசியல் சமூகமயவாக்கம் தனிமனிதனிலிருந்து உருவாக்கப்பட்டு அரசியல் விடயத்திற்கு முன்னெடுக்கப்படுகின்றது.இவ்வகையில் சமூகமயவாக்கத்தினை பின்வரும் நிறுவனங்கள் உருவாக்குகின்றன எனக் கூறுகின்றார்கள்.

குடும்பம்

இது முதலாவது நிறுவனமாகக் காணப்படுகின்றது. பிறந்த ஒரு குழந்தை உலகத்தைப் பார்ப்பதற்கு உதவும் முதல் ஊடகம் குடும்பம் என்ற நிறுவனமேயாகும். இந்நிறுவனம் அதிகாரத்துடன் குழந்தையினை தொடர்புபடுத்துகின்றது. தனது எண்ணங்களை வளர்க்கவும், அரசியல் முறைமைகளையும் அதன் நிறுவனங்களையும் அறிந்து கொள்வதற்கும் பெற்றோர்களே முதல் நிலையில் உதவுகின்றார்கள் தனிப்பட்டவர்களின் அரசியல் ஆளுமை, சிந்தனை மனோபாவம், செயற்பாடுகள் யாவும் வீட்டிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.

பாடசாலை

பாடசாலையும், பாடசாலைக் கல்வியும் அரசியல் சமூகமயவாக்கத்தின் தனது சொந்த பங்களிப்பினைச் செலுத்துகின்றது. பல வகையான கல்வி பாடசாலையில் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்வியானது மாணவர்களின் நடத்தை, பாடவிதானம் என்பவற்றிற்கேற்ப போதிக்கப்படுகின்றது. பாடசாலையின் சூழலுக்கேற்ப ஆசிரியர்களும், மாணவர்களும் தமக்கான குறிப்பிட்ட பாதையினை தெரிவு செய்து கொள்கின்றனர்.

சமய நிறுவனங்கள்

மத நிறுவனங்களும் அரசியல் சமூகமயவாக்கதில் பங்கு வகிக்கின்றன. அனேக ஐரோப்பிய நாடுகளில் ரோமன் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கு என்பது தாராண்மை ஜனநாயகத்தையும், சர்வாதிகாரத்தினையும் பெருமளவிற்கு பாதிப்பிற்குள்ளாக்கியிருந்தது. மத ரீதியான செல்வாக்கு அரசு, கல்வி என்பதைப் பாதிக்கும் போது முரண்பாடுகள் தோற்றம் பெறுவதும் தவிர்க்க முடியாததாகிறது. உதாரணமாக கத்தோலிக்க மதத்திற்கும் புரட்டஸ்தாந்து மதத்திற்கும் இடையிலான முரண்பாட்டினைக் குறிப்பிடலாம். இதே போல ரோமன் இஸ்லாமிய மத நிறுவனங்களின் செல்வாக்கு அரேபிய நாடுகளில் காணப்படுவதுடன், சமூகமயவாக்கலில் இதன் பங்கு காத்திரமானதாகவும் காணப்படுகின்றது.

வேலைத்தளங்கள்

வேலைத்தளங்கள், அலுவலகங்கள் என்பனவும் அரசியல் சமூகமயவாக்கலில் பங்கு வகிக்கின்றன. தொழில் நிறுவனங்கள் முறைசார்ந்த முறைசாரா நிறுவனங்களை தோற்றுவிக்கின்றன. உதாரணமாக, ஒன்றியங்கள், கழகங்கள் போன்றன. இந் நிறுவனங்கள் அரசியல் தொடர்பாடல்களுக்கான ஊடகங்களாக மாறுகின்றன. கூட்டுப் பேரம் பேசுதல் அல்லது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுதல் போன்றன மிகவும் சக்தி வாய்ந்த சமூகமயவாக்க அனுபவங்களை தொழிலாளர்கள் ஊழியர்களுக்கு வழங்குகின்றன.

வெகுஜனத் தொடர்பு சாதனங்கள்

தனிமனிதர்களின் ஆளுமையினை வளர்ப்பதில் இவற்றின்; பங்கு காத்திரமானதாகும். செய்தித்தாள்களில் வரும் அறிக்கைகள், வானொலியில் போகும் உரையாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றின் செல்வாக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் மக்களுடய விருப்பு, வெறுப்புக்களுக்கேற்ப மக்களின் தெரிவு என்பது வேறுபட்டுச் செல்லலாம். மேலும் அச்சகம், வானொலி, தொலைக்காட்சி என்பவற்றின் வேறுபட்ட பெறுமானங்களுக்கேற்ப இவற்றின் மூலம் தனிமனிதனுக்குக் கிடைக்கும் அறிவு வேறுபட்டுச் செல்லும்.

குறியீடுகள்

வளர்ச்சியடைந்து வருகின்ற ஒரு அரசியல் சமூதாயத்தில் குறியீடுகள் சமூகமயவாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக பொது தேர்தல் ஊர்வலங்கள், கர்த்தால்கள், கதவடைப்புக்கள், மாக்ஸ், லெனின், காந்தி போன்றோரின் பிறந்தநாள் விழாக்கள் போன்றவைகள் அரசியல் சமூகமயவாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.

  1. ஜனநாயக சர்வாதிகார நாடுகளில் அரசியல் சமூகமயமாதல்

ஒவ்வொரு நாடும் அரசியல் சமூகமயவாக்கத்திற்குட்பட்டிருக்கின்றன. இருப்பினும் இதன் இயங்கு முறை வௌ;வேறுபட்டதாக காணப்படுகின்றது. ஜனநாயக நாட்டில் மக்கள் ஜனநாயகத்தின் அர்த்தத்தினை நோக்கியதாகவும் சட்டவாட்சியின் தாற்பரியத்தையும், நீதித்துறைச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தினையும், பத்திரிகைச் சுதந்திரத்தையும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் சமூகமயவாக்கப்படுகின்றனர்.

மேலும் ஜனநாயக நாட்டின் குடிமகன் இதனை பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பெற்று சுதந்திர அரசியல் வாழ்க்கையின் முக்கியத்துவம் பற்றி சுருக்கமானதும், வளர்ச்சியடைந்ததுமான உறுதியான எண்ணத்தை வெளிப்படுத்துகின்றான். இது சர்வாதிகாரத்தில் முற்றிலும் எதிராகக் காணப்பட்டது. அரசியல் அதிகாரம் குவிந்த ஆட்சியாளர்களால் ஒரு புதிய சுருங்கிய அரசியல் கலாசாரத்தைப் புகுத்த பாடசாலைப் புத்தகங்களிலும், எல்லாக் கற்கைத் தொகுதிகளிலும் அரசியல் நிறுவனங்களின் செயற்பாடும், வடிவங்களும் புகுத்தப்பட்டு முன்னெடுக்கப்படும்.

அரசியல் சமூகமயமாதல் ஒரு மனிதனை அரசில் உள்வாங்கிக் கொள்வதற்கும், அதை விமர்சிப்பதற்கும், அதனுடைய செயற்பாடுகளை இனம் காண்பதற்கும், அரசியல் நிகழ்வுகளை விளங்குவதற்கும் உதவுகின்றது. சமூகத்திற்கும், அரசியலிற்கும் இடையே நடைபெறும் செயற்பாட்டிற்கு ஒரு பிணைப்பாக அரசியல் சமூகமயமாதல் காணப்படுகின்றது. அரசியல் சமூகமயமாதல் ஒரு ஸ்திரத் தன்மையைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும். அரசியல் சிந்தனைகளை, கொள்கைகளை அகவயமாக்கி உள்வாங்குவதற்கு அரசியல் சமூகமயமாதல் உதவுகின்றது. இவ்வாறு செய்வதால் அரசில் முழுநம்பிக்கையை உருவாக்கி விடும் எனலாம்.

 

பாராளுமன்ற அரசாங்க முறைமை

ஜனநாயக அரசாங்கங்களைப் பொதுவாக பாராளுமன்ற அரசாங்க முறைமை, ஜனாதிபதி அரசாங்க முறைமை என இரண்டாக வகைப்படுத்தலாம். இவ்வகைப்பாடானது சட்ட சபைக்கும், நிர்வாகத் துறைக்கும் இடையிலான உறவின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. சட்டத்துறையும், நிர்வாகத்துறையும் கூட்டாக மக்களுக்கு பொறுப்புக் கூறக்கூடிய ஓர் அரசாங்க முறையாக பாரளுமன்ற அரசாங்க முறை உருவாக்கப்படுகின்றது. இதனை சேர். ஐவர் ஜெனிங் அமைச்சரவை அரசாங்க முறைமை என அழைக்கின்றனர். ரிச்சார்ட் குரொஸ்மென் இதனை பிரதம மந்திரி அரசாங்க முறைமை என அழைக்கின்றார்.

பாராளுமன்ற அரசாங்க முறையின் தோற்றத்தினை பிரித்தானியாவில் இருந்தே இனங்காண முடியும். பிரித்தானியாவில் காணப்படும் பாராளுமன்ற அரசாங்கமுறை பதினெட்டாம் நுற்றாண்டிலிருந்து பெறப்பட்ட அனுபவங்களினூடாக அபிவிருத்தியடைந்த ஒன்றாகும். ஆனால், இன்று பாராளுமன்ற ஆட்சி முறையினை அவுஸ்திரேலியா, பெல்ஜியம், டென்மார்க், இந்தியா, ஜப்பான், கனடா போன்ற அனேக நாடுகள் பின்பற்றுகின்றன.

1. பாராளுமன்ற அரசாங்க முறை வெற்றிகரமாக இயங்குவதற்குத் தேவையான சிறப்பியல்புகள்

பெயரளவு நிர்வாகி

பாராளுமன்ற அரசாங்க முறை இரண்டு வகையான அரசாங்க முறையினைக் கொண்டிருக்கின்றது. ஒன்று உண்மை நிர்வாகம் மற்றையது பெயரளவு நிர்வாகம். பெயரளவு நிர்வாகமானது ஒன்றில் பரம்பரையானதாகக் காணப்படலாம். அல்லது தெரிவு செய்யப்பட்டதாக காணப்படலாம். ஆனால் நிர்வாகி பெயரளவு அதிகாரங்களை மட்டுமே கொண்டவராகக் காணப்படுவார். உதாரணமாக இங்கிலாந்தில் அரசியும்;, இந்தியாவில்; ஜனாதிபதியும் பெயரளவு நிர்வாகியாக இருந்து செயற்படுவதைக் குறிப்பிடலாம்.

முழு நிர்வாகமும் பெயரளவு நிர்வாகியின் பெயராலேயே மேற்கொள்ளப்படுகின்றன. எல்லா அதிகாரங்களும் இவருடைய பெயரால் மேற்கொள்ளப்பட்டாலும், அமைச்சர்களால் இவ் அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டு பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறப்படுகின்றது. பெயரளவு நிர்வாகியே பிரதம மந்திரியை நியமிப்பவராகக் காணப்படுவார். பிரதம மந்திரியே அரசாங்கத்தின் தலைவராகக் காணப்படுவார். உண்மை நிர்வாகி உயர் நெறிப்படுத்தும் அதிகாரத்தினைக் கொண்டவராகக் காணப்படுவார் இவரே நிர்வாகத்தினை செயற்படுத்துகின்ற உண்மையான நிர்வாகியாகவும் காணப்படுவார். உண்மை நிர்வாகியின் ஆலோசனைப் படி பெயரளவு நிர்வாகி பின்வரும் கடைமைகளை மேற்கொள்ளுகின்றார்.

  • அமைச்சர்களை நியமித்தல், நீக்குதல், மாற்றியமைத்தல்
  • பாராளுமன்றக் கூட்டத் தொடர்களை கூட்டுதல், ஒத்தி வைத்தல்.
  • யுத்தம் சமாதானம் என்பவற்றை பிரகடனப்படுத்துதல்

இதனை பெயரளவு நிர்வாகியின் பெயரில் உண்மை நிர்வாகி செய்யும் அரசாங்க ஆட்சி என வரையறுக்கலாம்.

ஒருமித்த தன்மை

பிரதம மந்திரி பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையினைப் பெற்ற கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படுவார். அமைச்சரவையின் தலைவர் பிரதம மந்திரி என அழைக்கப்படுவார். அனேகமாக எல்லா அமைச்சர்களும் பிரதம மந்திரியின் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள். சில வேளைகளில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து கூட்டு அரசாங்கத்தினை அமைக்கலாம். இதனைவிட சில வேளைகளில் பிரதம மந்திரி தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் நோக்குடன், எதிர்க்; கட்சிகளில் இருந்தும் அமைச்சர்களை நியமனம் செய்வார். தேசிய முக்கியத்துவம் நிலவும் சூழ்நிலைகளில் இவ்வாறான அமைச்சரவை அமைக்கப்படுவது வழக்கமாகும்.

கூட்டுப் பொறுப்பு

பாராளுமன்ற அரசாங்க முறையில் இருக்க வேண்டிய அதிக முக்கியத்துவம் வாய்ந்த பண்பு கூட்டுப் பொறுப்பாகும். அமைச்சர்கள் தனியாகவும், கூட்டாகவும் சட்டசபைக்கு பொறுப்பானவர்களாகும். இதன் கருத்து யாதெனில், அமைச்சர்கள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே பாராளுமன்றத்தில் செயற்படுகின்றார்கள். இங்கு தீர்மானங்கள் கூட்டாக எடுக்கப்படுகின்றன. அதாவது குறிப்பிட்ட ஒரு அமைச்சின் செயற்பாடு, கொள்கை தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்ட பின் அதற்கு முழு அமைச்சரவையுமே பொறுப்பானதாகும். அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவதனால் முழு அமைச்சர்களுமே பதவி விலக வேண்டும். இதுவே கூட்டுப் பொறுப்புத் தத்துவம் என அழைக்கப்படுகின்றது.

பலமானதும் திறமையானதுமான எதிர்க்கட்சி

ஒரு கட்சி பெரும்பான்மை பலத்தை பெற்று ஆளும் கட்சியாகும் போது, ஏனைய கட்சிகள் எதிர்க்கட்சிகளாக தொழிற்படும்;. இவ்வாறான நிலை ஓர் உறுதியான ஆட்சியமைப்பிற்கு வழி விடுவதாக இருக்கும் இதனை ஆங்கிலேயர் விசுவாசம் என அழைக்கின்றார்கள். எதிர் கட்சியின் நோக்கம், ஆளுங்கட்சியின் ஏதேச்சதிகார நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதாகும். ஆளுங் கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்கட்சி ஆணைக் குழுக்களை நிறுவி விசாரணை நடத்த எதிர்கட்சிகள் முற்படலாம். இவ்வாறான சூழ்நிலைகள் தோன்றுகின்ற போது பிரதம மந்திரி அரசின் தலைவரை அழைத்து பாராளுமன்றத்தினைக் கலைத்து மக்களின் மீள் ஆணையினைப் பெறும்படி ஆலோசனை கூறலாம். சில வேளை இவ்வாறான சூழ்நிலைகள் புரட்சிகரமான சூழ்நிலைகளைக் கூட தோற்றுவித்து விடலாம்.

 

அரசியல் நவீனத்துவம்

அரசியல் நவீனத்துவம் என்ற பதமானது அரசியல் கலாசாரத்தில் ஏற்படும் மாற்றத்தினை குறித்து நிற்கின்றது. அரசியல் கலாசாரத்தில் ஏற்படும் மாற்றமானது சமூக, பௌதீக, சூழலால் தீர்மானிக்கப்படுகின்றது. எஸ்.பி.ஹன்ரிங்ரன் அரசியல் நவீனத்துவத்தை வரைவிலக்கணப்படுத்தும் போது மனிதனின் சிந்தனை, செயற்பாடு, அனைத்திலும் ஏற்படும் மாற்றத்துடன் தொடர்புடைய பன்முக நிகழ்வாகும்' எனக் கூறுகின்றார்.

அரசியல் நவீனத்துவம் ஓர் பரந்த விடயங்களைக் கொண்ட எண்ணக்கருவாகும். பொருளியல், சமூகவியல், உளவியல் பண்புகளுடன் தொடர்புபடுத்தி இவ் எண்ணக்கரு விளக்கப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சி, மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரிப்பு, தலாவீத வருமான அதிகரிப்பு, பொருளாதாரத் திட்டமிடல், பாரிய கைத்தொழிலாக்கம், மூலதனத் திரட்சி, நகரமயவாக்க அதிகரிப்பு, விவசாயத்துறை விகிதாசார ரீதியாகக் குறைந்து செல்லுதல், விஞ்ஞான வளர்ச்சி, போக்குவரத்து வளர்ச்சி, கல்வி வளர்ச்சி அதிகரிப்புப் போன்றன நவீனத்துவத்தினை தீர்மானிக்கின்றன.

நவீனத்துவம் பன்முகத் காட்சிநிலையினை காட்டுகின்ற எண்ணக்கரு என்றவகையில் பின்வரும் விடயங்கள் கருத்தில் கொள்ளப்படகின்றன.

  • உளவியல் நிலை

மக்களின் மனப்பாங்கு, விழுமியங்கள்; என்பவற்றினால் ஏற்படும் உளவியல் மாற்றத்துடன் நவீனத்துவம் தொடர்புடையது.

  • அறிவுசார் நிலை

தான் வாழும் சூழல் பற்றிய அறிவினை விசாலமாக விரிவாக்கம் செய்வதும், கல்வியறிவூட்டல், மக்கள் தொடர்பாடல் என்பவற்றின் ஊடாக தான்பெற்ற அறிவினை ஏனையவர்களுக்கு பரப்புதலுடன் தொடர்புடையதாகும்.

  • குடித்தொகை நிலை

வாழ்க்கைத்தர சிறப்பு நவீனமயவாக்கம், நகர்புறம் நோக்கிய மக்கள் குடிபெயர்வு என்பவற்றுடன் தொடர்புடையதாகும்.

  • சமூக நிலை

தனிமனிதர்கள் குடும்பத்திற்குச் செலுத்தும் விசுவாசத்துடன் தொடர்புடையதாகும்.

  • பொருளியல் நிலை

சந்தை வளர்ச்சி, விவசாயம், வர்த்தக முன்னேற்றம், கைத்தொழில் அபிவிருத்தி என்பவற்றுடன் தொடர்புடையதாகும்.

1. அரசியல் நவீனத்துவமும் சமூக மாற்றமும்

அரசியல் நவீனத்துவம் பற்றிய கல்வியானது, சமூக வளர்ச்சியுடன் தொடர்புடையதாகும். அல்லது புராதன சமூக, பொருளாதார, உளவியல் பண்புகளை கைவிட்டு புதிய முறையிலான சமூகமயவாக்கத்தினையும், நடத்தையினையும் வெளிப்படுத்துவதுடன் தொடர்புடையதாகும். இவ்வகையில் உலகத்தின் சமூக அரசியல் முறைமையினை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

புராதன பின்தங்கிய முறைமை

இவ்வகைப்பாட்டிற்குள் உலகத்தின் மிகவும் பின்தங்கிய சமூக முறைமையானது உள்ளடக்கப்படுகின்றது. இச் சமூக முறைமையில் மரபுகள், வழக்காறுகள், சமயச் சடங்குகள் போன்றன முக்கியம் பெறுகின்றன. இவைகள் அதிகாரத்தினைத் தீர்மானிப்பதில் காத்திரமான வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றன. இச் சமூக முறைமையில் அரசியல் சமூகமயமாக்கம், கூட்டுணர்வு, ஆட்சேர்ப்பு என்பவற்றில் அதிக அக்கறை காடப்படுவதில்லை. சாதி, சமயம் , மரபுவழிக் குழுக்கள், குடும்ப உறவுகள் போன்றனவே தீர்மானம் எடுப்பதிலும், பங்குபற்றலிலும் முக்கிய வகிபங்கு வகிக்கின்றன. சமூகப் படிநிலை அமைப்பின் அதிகார மையத்தினை தீர்மானிப்பவைகளாக இவைகளே காணப்படுகின்றன. மூன்றாம் மண்டல நாடுகள் பலவற்றில் உதாரணமாக நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இவ்வாறான சமூகமைப்பு காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது.

வளர்ச்சியடைந்து வரும் சமூக முறைமை

வளர்ச்சியடைந்து வரும் சமூக முறைமையினைக் கொண்ட நாடுகளில் மரபுகள், நவீனத்துவம் என்ற இரண்டு பண்புகளும் காணப்படும். ஐரோப்பிய காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட அனேக நாடுகளில் இப்பண்புகள் காணப்படுகின்றது. இங்கு கலப்புக் கலாசார பண்புகள் அபிவிருத்தியடைந்து காணப்படும். இந்நாடுகளின் சமூக, அரசியல் அமைப்புக்களில் காலனித்துவ நாட்டின் அரசியல் கலாசாரத்தின் தாக்கம், மேலாதிக்கம் என்பன காணப்படும். கலப்புக் கலாசாரத்தின் வெளிப்பாடுகள் இந்நாடுகள் நடாத்திய சுதந்திரப் போராட்டங்களில் காணப்பட்டிருந்தது. சுதந்திரம் அடையப்பட்டதன் பின்னர் மரபு வாதிகளின் அழுத்தம் என்பது அமுக்கக் குழுக்கள், அரசியற் கட்சிகள் என்ற வடிவில் மேலோங்கத் தொடங்கியது. இதன் விளைவு நவீனத்துவவாதம் , மரபு வாதம் என்ற இரட்டைப் பரிமாணங்கள் சமூக அரசியல் நிறுவனங்களை தோற்றுவிக்கின்;றன.

வளர்ச்சியடைந்த மேலைத்தேய சமூகமைப்பு

இது மிகவும் உயர்ந்த கல்வியறிவும், செல்வமும் நிறைந்ததாகவும், சிறப்பான நகரமயவாக்கம், கைத்தொழில்மயவாக்கம் கொண்டவர்களாகவும், தீர்மானம் எடுப்பவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களாகவும், மக்களுடைய உண்மையான பிரதிநிதியாகவும் காணப்படுவார்கள். இவ்வகையில் இந்நாடுகளில் உத்தியோகபூர்வ தீர்மானங்கள் யாவும் மிகவும் உயர்ந்த ஜனநாயக பண்புகளை அடிப்படையாகக் கொண்டு; காணப்படும். பிரித்தானியா, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளை இவ்வகைப்பாட்டிற்குள் அடக்கலாம்.

அரசியல் நவீனத்துவமும் அரசியல் முறைமைகளும்

அரசியல் நவீனமயமாக்கம் என்ற பதம், வேறுபட்ட சமூக முறைமைகளுக்கு ஏற்ப வேறுபட்ட வகைப்பாடுகளைக் கொண்டிருப்பது போன்று உலக அரசியல் முறைமைகளுக்கு ஏற்பவும் அரசியல் நவீனத்துவம் வேறுபட்டு காணப்படுகின்றது. எட்வார்ட் ஏ. சில்ஸ் ஐந்து வகையான அரசியல் முறைமைகளை இனங்காணுகின்றார். அவையாவன,

அரசியல் ஜனநாயகம்

ஜனநாயக அரசியல் முறையானது மிகவும் சிறப்பானதாகும். பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் ஜனநாயக அரசியல் முறையானது சிறப்பாக இயங்குகின்றது. ஜனநாயக அரசியல் முறைமையில் சர்வஜன வாக்குரிமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட சட்ட சபையின் செயற்பாடு காணப்படும் சட்ட சபையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்களினால் அரசாங்கம் நெறிப்படுத்தப்படும்.

அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியல் முறைமைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எதிர்க் கட்சிக்கும், எதிர்க் கருத்துக்குமான சுதந்திரம் முழுமையாக வழங்கப்பட்டிருக்கும். எப்போதும் சுதந்திரமானதும், தனித்துவமானதுமான நீதித்துறையின் செயற்பாடு பேணப்படும். அரசாங்கத்தினை மாற்றுவதற்கு அல்லது வழிப்படுத்துவதற்கு அரசியல் திட்டத்தினை மாத்திரமே பயன்படுத்துவார்கள். வன்முறையினை விரும்பமாட்டார்கள். தங்களுடைய அரசாங்கத்தில் நம்பிக்கையினை வளர்ப்பவர்களாகவே காணப்படுவார்கள். ஜனநாயக வழிமுறைகளிலுள்ள விழுமியங்கள், நடத்தைகளை விமர்சனம் செய்யும் ஆற்றல் கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள்.

பாதுகாவலர் ஜனநாயகம்

எட்வார்ட் ஏ. சில்ஸ் என்பவர் இனம் காணும் இரண்டாவது அரசியல் முறைமை பாதுகாவலர் ஜனநாயகம். ஜனநாயகத்தின் விழுமியங்கள், பண்புகளை பாதுகாவலர் ஜனநாயகம் அரசியல் முறைமையில் அவதானிக்க முடியும். அரசியலில் ஜனநாயகப் பாதையினை அறிந்து கொள்வதற்கு இந்நாடுகள் முயற்சி செய்து கொண்டிருக்கும். பாதுகாவலர் ஜனநாயகம் அரசியல் முறைமையில் நிர்வாகத்துறைக் கட்டுப்பாடு முக்கியமானதோர் நிலையில் இருக்கும். சட்ட சபையினை விட மிகவும் உயர்ந்த அதிகார மையத்தினைக் கொண்டதாக நிர்வாகத்துறை காணப்படும். எதிர்க்கட்சி செயற்பாடு, எதிர்வாதம் என்பவற்றிற்கு முக்கிய இடம் வழங்கப்படும். ஆனாலும் நிர்வாகத்துறை அரசியல் தொடர்பாடலில் மிகவும் பலமான நிலையினை வைத்துக் கொள்ளும். சட்டவாட்சியும், பொதுச் சமத்துவமும் பேணப்படுவதாக இருக்கும்.

நவீனத்துவ சிறுகுழுவாட்சி

நவீனத்துவ சிறுகுழுவாட்சி அரசியல் முறைமையானது மரபுரீதியான சிறுகுழுவாட்சி முறைமைக்கும் அரசியல் ஜனநாயகத்திற்கும் இடையிலான ஓர் அரசியல் முறைமையாகும். நவீனத்துவ சிறுகுழுவாட்சி அரசாங்க முறையில் ஆட்சியாளர்கள் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு ஆயுதப் படைகளை பயன்படுத்துவார்கள். அல்லது உயர் இராணுவத் தலைமைப் பீடத்தினர் எல்லா அதிகாரங்களையும் தங்களுடன் எடுத்துக் கொள்வார்கள். இதனை 'அதிகார வர்க்க ஆட்சிக்கான சட்ட ரீதியான முத்திரை' எனக் கூறலாம். நவீனத்துவ சிறுகுழுவாட்சி அரசியல் முறைமையில் பாராளுமன்றம் வெறும் ஆரவாரம் செய்யும் சபையாக மாத்திரமே காணப்படும். எதிர்க் கட்சி வலுவிழந்து காணப்படும். இங்கு ஜனநாயக வழிமுறைகள் குறைவடைந்து காணப்படும். சுதந்திரமான நீதித்துறை செயற்பாடுகளும் குறைவடைந்து காணப்படும்.

சர்வாதிகார சிறு குழுவாட்சி

சர்வாதிகார சிறுகுழுவாட்சி அரசியல் முறையானது வலதுசாரி மனோபாவம் கொண்ட சர்வாதிகார சிறுகுழுவாட்சியாகவோ அல்லது இடதுசாரி மனோபாவம் கொண்ட சர்வாதிகார சிறுகுழுவாட்சியாகவோ காணப்படும். வலதுசாரி சர்வாதிகார சிறுகுழுவாட்சிக்கு இத்தாலியின் பாசிசத்தையும் , ஜேர்மனியின் நாசிசத்தையும் உதாரணமாக கூறலாம். இடதுசாரி சர்வாதிகார சிறுகுழுவாட்சிக்கு சோவியத் ரஸ்சியாவின் கம்யூனிச ஆட்சியையும் , சீனாவின் கம்யூனிச ஆட்சியையும் உதாரணமாக் கூறலாம். பொதுவாக சர்வாதிகார சிறுகுழுவாட்சி அரசியல் முறைமையில் அதிகாரம் ஆளும் குழுவிடம் குவிக்கப்பட்டிருக்கும். இங்கு சட்டவாட்சியை எங்குமே காணமுடியாது. சுதந்திரமான நீதித்துறை செயற்பாட்டினையோ, எதிர்கட்சியின் சட்ட ரீதியான செயற்பாட்டினையோ காணமுடியாது. ஜனநாயகப் பண்புகளாகிய சர்வஜன வாக்குரிமை, தேர்தல், சட்டத்துறைச் சுதந்திரம் போன்றன வெறும் பிரச்சார உத்தியாக மட்டுமே பயன்படுத்தப்படும்.

மரபு ரீதியான சிறுகுழுவாட்சி

மரபு ரீதியான சிறுகுழுவாட்சிஅரசியல் முறையானது மரபு ரீதியான ஆட்சியாக காணப்படும். மரபு ரீதியான சிறுகுழுவாட்சியில் ஆட்சியாளர்கள் குடும்ப அடிப்படையில் தோற்றம் பெறுகின்றார்கள். இவ் அரசியல் முறைமையில்; ஆட்சியாளன் அரசியல் ஆலோசகர்களின் உதவியுடன் ஆட்சியை மேற்கொள்கின்றான். சட்;டசபை குறைந்தபட்சம் பிரச்சார நோக்கத்திற்காகவாவது பயன்படுத்தப்படுவதில்லை. அரசின் தொழிற்பாடு மிகவும் உயர்ந்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். பணிக்குழுவினரின் செயற்பாடு அவசியம் என்ற நிலை உணரப்படாது காணப்படும். ஆட்சியாளர் சிறிதளவு ஆயுதப்படைகளையும், பொலிஸ் படையினையும் தமது பாதுகாப்பிற்காக வைத்திருப்பார்கள். ஆட்சியாளர் தமது ஆட்சியுரிமையினை பரம்பரை, மரபுரிமை, கலாசாரம் என்பவற்றின் வழி கோருபவர்களாகக் காணப்படுவார்கள்.

 

அரசியல் கலாசாரம்

அரசியல் கலாசாரம் என்ற எண்ணக்கரு சமூகவியல் நோக்கில் அரசியல் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. மக்களின் சமூக நம்பிக்கைகள், விழுமியங்கள் , மனப்பாங்கு என்பவற்றினால் தொகுக்கப்பட்டதே அரசியல் கலாசாரமாகும். அரசியல் முறைமையில் அங்கம் பெறும் 'தனி மனிதர்களுடைய மனப்பாங்குகள் அரசியலாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.எனவே மக்களின் மனப்பாங்கு எதுவோ அதுவே அரசியல் கலாசாரம் ஆகின்றது எனக் கூறலாம்.

மனிதனின் பொதுவான இயல்புகளான விழுமியங்கள் மீதான நம்பிக்கைகள், உணர்ச்சி வசப்படும் மனப்பாங்குகள் ஒரு சந்ததியிலிருந்து இன்னோர் சந்ததிக்குப் மாற்றப்படுகின்றன. அதேநேரம் இயங்கியல் விதியின்படி சமூகத்தின் பொதுவான கலாசார அம்சங்கள் படிப்படியாக மாற்றங்களுக்குள்ளாகின்றன. எனவே சமூக கலாசாரத்துடன் தொடர்புடைய காட்சிகள் எவ்வாறு தோற்றம் பெற்றன இது அரசாங்கத்துடன் எவ்வாறு தொடர்பாக்கப்பட்டது என்பன கருத்தில் எடுக்கப்படுகின்ற போது இதற்கூடாக அரசியல் கலாசாரம் தோற்றம் பெற்று விடுகின்றது.

எனவே அரசியல் கலாசாரம் அரசியல் இலக்கினை மையமாகக் கொண்ட முழுமையான அரசியல் பங்கீடு என கூறலாம். ரொபர்ட் ஏ. டால் என்பவர் 'அரசியல் கலாசாரத்தினை சில மூலக் கூறுகளின் ஊடாக தெளிவுபடுத்துகின்றார். அரசியல் கலாசாரம் பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன் தொடர்புடையது, கூட்டுச் செயற்பாட்டுடன் தொடர்புடையது ,அரசியல் முறைமையுடன் தொடர்புடையது, ஏனைய மக்களுடன் தொடர்புடையது என்பதே இவரின் கருத்தாகும்.

ஆயினும் லூசியன் டபிள்யூ பை என்பவர் அரசியல் கலாசாரம் என்பதனை அரசியல் அபிவிருத்தி என்ற எண்ணக்கருவுடனும், மூன்றாம் மண்டல நாடுகளுடனும் தொடர்புபடுத்தி ஆய்வு செய்கின்றார். இவர் அரசியல் கலாசாரம் தொடர்பான ஆய்விற்காக மூன்று விடயங்களை முன்வைக்கின்றார்.

  1. அரசியல் வியாபகம் அதாவது அரசியல் இலக்கும், கருத்தும் எவ்வாறு தொடர்புபடுகின்றன.
  2. அரசியல் செயற்பாட்டின் தரமான மதிப்பீடு
  3. அரசியல் செயற்பாட்டுப் பெறுமானம்.

அலமன்ட், பவல் ஆகியோர்கள் அரசியல் கலாசாரம் தொடர்பாக மூன்று வகையான கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். அதாவது அரசியல் கலாசாரமானது

  1. அறியும் ஆற்றலுடன் தொடர்புடையது
  2. உணர்வுடன் தொடர்புடையது
  3. மதிப்பீட்டுடன் தொடர்புடையது எனக் கூறுகின்றார்கள்

எனவே அரசியல் கலாசாரம் அரசியல் முறைமையில் மக்களுடைய மனப்பாங்கு, நம்பிக்கைகளை முன்னேடுத்துச் செல்கின்றது.

1. அரசியல் கலாசாரத்திற்கு ஏனைய பாடங்களுடனுள்ள தொடர்பு

அரசியல் கலாசாரம் வரலாறு, புவியியல் மற்றும் சமூகப் பொருளாதார பாடங்களுடன் தொடர்புடையதாகும்

வரலாறு

ஒரு நாட்டின் மரபுகள் அந்நாட்டின் அரசியல் கலாசாரத்தைத் தீர்மானிக்கின்றன. இதனை அறிவதற்கு வரலாற்றினூடாக நாம் செல்ல வேண்டும். உதாரணமாக பிரித்தானிய மக்களின் பழமை பேணுகின்ற தன்மையினையும், பிரான்சிய மக்களின் தீவிர மாற்றங்களை விரும்பும் மனப்பாங்கினையும் குறிப்பிடலாம். இந்திய மக்கள் பிரித்தானியாவிலிருந்து பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையினை கற்றுக் கொண்டார்கள். அல்ஜீரியா, வியட்நாம் மக்கள் பிரான்சிலிருந்து வன்முறை, புரட்சி வழிமுறைகளைக் கற்றுக் கொண்டார்கள்.

புவியியல்

புவியியல் பண்பு ஒரு நாட்டு மக்களுடைய அரசியல் கலாசாரத்தினை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பிரித்தானியா ஏனையை வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்களிலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்கு ஏற்ற புவியியல் தன்மைகளைக் கொண்டிருந்தது. தனித் தனி அடையாளங்களைக் கொண்ட தேசியங்கள் தமது தனித்துவமான தேசியத்திற்கான போராட்டங்களூடாக இறைமையுடைய தனியரசுகளை நிறுவ முற்படுகின்றன. உதாரணமாக கென்ய அரசாங்கம் அங்கு வாழும் சோமாலிய பழங்குடியினருக்கு எதிராக சண்டையில் ஈடுபட்டு வந்தது. சோமாலியப் பழங்குடியினர் கென்யாவிலுள்ள யூனியனை சோமாலியாவுடன் இணைக்க வேண்டுமெனக் கோரி கென்யாவுடன் யுத்தம் புரிந்தனர்.

சமூகப் பொருளாதார அபிவிருத்தி

நகர மற்றும் கைத்தொழில் அபிவிருத்தியினால் மிகவும் சிக்கலான சமூக அமைப்பு தோற்றுகின்றது. இங்கு கல்வித்தரம் மிகவும் உயர்ந்ததாகக் காணப்படுவதுடன் தொடர்பாடலும் அதற்கான வசதிகளும் உயர்ந்தளவில் பயன்படுத்தப்படும். . ஆனால், கிராமிய சமுதாயமொன்றில் இவ்வாறான வளர்ச்சியினையும், இதனால் ஏற்படக் கூடிய அபிவிருத்திகளையும் அவதானிக்க முடியாது. ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார, தொழிநுட்ப அபிவிருத்தியானது அந்நாட்டுத் தொழிலாளர் வர்க்கத்தினை குட்டி பூஸ்வாக்களாக வளர்ச்சியடைய வைத்தது. கார்ல்மாக்ஸ் கூறும் கைத்தொழில் வளர்ச்சியடைய தொழிலாளர் வர்க்கம் சுரண்டலுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகும் என்ற கருத்து இங்கு முரண்பாட்டு நிற்பதை அவதானிக்கலாம்.

சமயச் சார்பற்ற பண்பும் அரசியல் கலாசாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. சமயச் சார்பற்ற பண்பு வளர்ச்சியடைய மக்களுடைய அரசியல் விழிப்புணர்ச்சியும் வளர்ச்சியடைகின்றது. மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வளர்ச்சியடைய சுயமாக தமது நாட்டின் அரசியல் முறைமை எவ்வாறானது? அரசியல் செயற்பாட்டில் தங்களுடைய பங்கு என்ன? என்பன போன்ற விடயங்களில் சுய அறிவினைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.

2. அரசியல் உறுதிப்பாடு மற்றும் மாற்றம்

உலகில் வெவ்வேறு வகையான அரசியல் முறைமைகள் காணப்படுகின்றன. அவைகளை அபிவிருத்தியடைந்த நாடுகள், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எனப் பொதுவாக அழைக்கலாம். அரசியல் முறைமைக்கு ஏற்ப அரசியல் உறுதிப்பாடு மற்றும் அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் கலாசாரத்தின் வகிபங்கு முக்கியமானதாகும்.

அரசியல் கலாசாரத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளது. அதிகாரம் என்பது ஜனநாயக அரசியல் முறைமையில் அரசியல் உறுதிப்பாட்டினையும், திறனையும் தீர்மானிக்கின்ற பிரதான மாறியாக, தீர்மானிக்கும் சக்தியாகவுள்ளது எனலாம். அரசை உருவாக்கியவர்கள் தமது அரசியல் கலாசாரத்துடன் அரசியல் முறைமை இணங்கிச் செல்லுதல் வேண்டுமென எதிர்பார்த்தார்கள். அதற்கேற்ப அதிகாரம் வெளிப்படும் எனவும் எதிர்பார்த்தார்கள். இல்லையேல் அரசியல் கலாசாரம் என்பது தொழிற்பட முடியாத ஓர் நிலை ஏற்படும் எனவும் எதிர்பார்த்தார்கள்.

மேலும் மரபு மற்றும் நவீனத்துவம் ஆகிய இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டது என்ற கருத்து தவிர்க்கப்படல் வேண்டும். பொதுவாக மக்கள் மரபு வாதிகளாகக் காணப்படுகின்ற அதே நேரத்தில் மாற்றத்தில் விருப்பம் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றார்கள். இங்கு புரட்சி மூலமான மாற்றம் என்பதைக் கருத்தில் எடுக்க முடியாது. புரட்சி என்பது புற நடையான ஒரு அம்சமாகவே கருத்தில் எடுக்கப்படல் வேண்டும். ஏனெனில் புரட்சி வாதிகள் மக்களைப் பலாத்காரம், சர்வாதிகாரம் என்பவற்றின் மூலம் தமது இலக்கினை அடைவதற்காகப் பயன்படுத்துகிறார்கள் இவ்வாறான நிகழ்வுகளுக்கு பாசிசம், கம்யூனிசம் ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம்.

இவ்வகையில் அரசியல் கலாசாரம்

  1. மாற்றங்களின் ஒழுங்கு முறையினால் தீர்மானிக்கப் படுகின்றது.
  2. அரசியல் உணர்வினைப் பெற்றுக்கொள்வதில் தங்கியுள்ளது.
  3. பழமைக்கும், புதுமைக்குமிடையில் சமத்துவத்தினை ஏற்படுத்துவதில் அரசியல்வாதிக்கு இருக்கும் திறமையில் தங்கியுள்ளது எனக் கூறலாம்.

3. அரசியல் முறைமை

நாடுகளின் அரசியல் கலாசாரத்துடன் அரசியல் முறைமைக்கு ஏற்படும் பொருத்தப்பாடானது வளர்ச்சியடைந்த மேற்குத்தேச ஜனநாயக நாடுகளின் தன்மை நிலை நிறுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக இருந்தது. இதன் கருத்து இந்நாடுகள் எவ்வித பிரச்சினைகளுமின்றி தமது அரசியல் கலாசாரத்தினை பேணிக்கௌ;கின்றன என்பதல்ல. இந்நாடுகளும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. வளர்ச்சியடைந்து வருகின்ற குறைவிருத்தி நாடுகளாகிய மூன்றாம் மண்டல நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து இவ்வாறான பிரச்சினைகள் மிகவும் குறைந்த அளவிலேயே நிகழ்கின்றன.

முடிவாக அரசியல் கலாசாரம் என்பது உறுதியான நம்பிக்கைகள், உணர்வுகள், மனோபாவங்களுடன் தொடர்புடைய ஒன்றாகும். மக்கள் தமது அரசியல் பெறுமானங்களாகிய உரிமைகள், சுதந்திரம், தத்துவம், நீதி, சட்டமும் விதியும், பத்திரிகைச் சுதந்திரம், நீதித்துறையின் சுதந்திரம் போன்றவற்றை எவ்வாறு பொறுப்புடன் மதிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்து அரசியல் கலாசாரம் பெறப்படுகின்றது. பொதுவாக மக்கள் தமது உணர்வுகள், செயல்கள் மூலம் இதனை வெளிப்படுத்துவார்கள். அரசியல் முறைமை ஒன்றின் வெற்றி அல்லது தோல்வியினை தீர்மானிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கின்றது எனக் கூறலாம்.

 

ஒழுங்கமைப்பும் அதன் அடிப்படைக் கொள்கைகளும்

அரசாங்கத்தின் பொதுக் கொள்கைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் ஊழியர்களினால் மேற்கொள்ளப்படும் இயக்க, இணக்க கட்டுப்பாட்டுச் செயல்களையும், தொடர்பு முறையாக அமையும் நடவடிக்கைகளையும் கொண்டியங்குவதே பொது நிர்வாகமாகும். பொது நிர்வாகத்தில் மக்கள் தம் குறிக்கோள்களையும், விருப்பங்களையும் பெற்று அவற்றின் பயனை நுகரும் வகையில் தம் கடமைகளுக்கும், செயல்களுக்கும் வடிவத்தினையும் தெளிவான செல்நெறிகளையும், வழி முறைகளையும் உருவாக்கிக் கூட்டுமுயற்சியுடனும், கட்டுக்கோப்புடனும்; செயல்படுவதே ஒழுங்கமைப்பாகும்.

அரசாங்க நிர்வாக அமைப்பில் சகலதும் அதிகாரம் மூலமே செயல்படுகின்றது. நிர்வாக ஒழுங்கமைப்பு அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்டும், மேலாண்மைக்குக் கட்டுப்பட்டும் இயங்குகின்றது. இவ்வகையில் பணிகளையும், பொறுப்புக்களையும் ஒதுக்கீடு செய்வதன் மூலம் சில உடன்பாடான நோக்கங்களை அடையப் பணியாட்களை ஒழுங்;கு செய்வதே ஒழுங்கமைப்பாகும் எனக் கூறிக் கொள்ளலாம்.

ஒழுங்கமைப்பு என்பதனை நிறுவனம் என்றும் தாபனம் என்றும் அழைக்கின்றனர். இது முக்கியமாக ஒழுங்கு, கட்டுப்பாடு என்பவற்றை வலியறுத்துகின்றது. அரசாங்கத்தின் தலைமை நிர்வாகியும், அவரது நிர்வாகக் கீழ்நிலை அலுவலர்களும் தமக்கு வழங்கப்பட்ட பணிகளைச் செயற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கட்டுமானமே ஒழுங்கமைப்பாகும். இவ் அமைப்புக்கள் காலத்திற்குகேற்ற வகையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிர்மாணிக்கப்பட்டும், நிர்வகிக்கப்பட்டும் வரவேண்டும்.

பணிகளையும், பொறுப்புக்களையும் ஒதுக்கீடு செய்வதன் மூலம் சில உடன்பாடான நோக்கத்தை நிறைவேற்ற பணியாட்களை ஒழுங்கு செய்வது ஒழுங்கமைப்பாகும். மனிதர்களையும் மூலப் பொருட்களையும் மிகப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கு ஒழுங்கமைப்பு உதவுகின்றது. பொதுநிர்வாகத்தில் இது முக்கியமானதாகக் கருதப்படுவதுடன் நிலைத்;து நிற்க வேண்டியதொன்றாகும். எனவே அது சட்ட ரீதியாக ஏற்படுத்தப்பட வேண்டியதுடன் அதற்கு வேண்டிய நிதி வசதிகளும், மக்களின் ஆதரவும் இருக்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் பொது நிர்வாகத்தினைப் பற்றி எழுதியவர்களும், கற்றவர்களும் ஒழுங்கமைப்பு பற்றிய தெளிவினைப் பெறுவதற்கு இயந்திரவியல் முறைமையினை கையாண்டிருந்தார்கள். காலப்போக்கில் ஒழுங்கமைப்புத் தொடர்பாக பாரிய ஆராட்சிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பல கோட்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ் எல்லா கோட்பாடுகளும் இரண்டு பாரிய வகைப்பாடுகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அவையாவன, இயந்திரவியல் அல்லது அமைப்புத் தொழிற்பாட்டுக் கோட்பாடு, மனிதத் தன்மை அல்லது சமூக உளவியல் கோட்பாடு என்பவைகளாகும்.

ஒழுங்கமைப்புப் பற்றி பல்வேறு அறிஞர்களும் பல்வேறுபட்ட வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளார்கள். அவர்களுள் ஜே.டி.மூனி என்பவர் 'ஒழுங்கமைப்பு என்பது கட்டடத்தின் நிர்மாணத்தை மட்டும் குறிப்பதன்று, ஒழுங்கமைப்பிலுள்ள எல்லோரையும், அவர்களின் ஒருங்கிணைப்பான பணிகளையும் குறிப்பதாகும். செயல் சக்தியைக் கொடுக்கக்கூடிய பணிகளைக் குறிப்பது அமைப்பு' என்கின்றார். ஜோன். எம். கோஸ் என்பவர் 'கடமைகளையும், பொறுப்புக்களையும் ஒதுக்கீடு செய்வதன் மூலம் சில உடன்பாடான நோக்கத்தை இலகுவாக நிறைவு செய்ய ஊழியர்களை ஒழுங்கு செய்தல் ஒழுங்கமைப்பாகும்' என்கின்றார். எல்.டி.வைற் என்பவரது வாதத்தின் படி 'பங்கிடப்பட்ட செயற்பாடு, பொறுப்புக்கள் என்பவற்றினூடாக சில உடன்பாடான நோக்கங்களை நிறைவேற்றுவற்காக தனிப்பட்டவர்களை சீர்ப்படுத்துவதே ஒழுங்கமைப்பாகும்'.

ஒழுங்கமைப்புப் பற்றி பல்வேறு அறிஞர்களும் கூறிய கருத்துக்களைப் பகுப்பாய்வு செய்யும் போது எமக்கு மூன்று முக்கிய கருப்பொருள்கள் முதன்மையடைவது தெளிவாகின்றது.

  1. நிர்வாகக் கட்டுமானத்தை அமைப்பதில் மேற்கொள்ளப்படும் செயல்முறை.
  2. மேற்கொள்ளப்படும் திட்டங்கள், செயற்பாடுகள், ஊழியர்களை பல மட்டங்களிலும் அமைத்துக் கொள்ளல்
  3. இவற்றின் மூலம் பெறப்படும் நிர்வாகக் கட்டுக்கோப்பு

நிறுவன ஒழுங்கமைப்புப் பற்றிய கோட்பாடுகள் யாவும் மனித உறவினையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. மக்களின் கடமைகளும், அவர்களிடையே செம்மைப்படுத்தப்பட்ட பரஸ்பர உறவுகளும் நிலை கொண்டுள்ள நிறுவனமே ஒழுங்கமைப்;பாகும். எனவே மக்களும் அவர்தம் சேவைகளும், அச்சேவைகளை நிறைவு செய்யும் பல்வேறு தேவைப் பொருட்களும் இல்லாது ஒழுங்கமைப்பு என்பது இயங்க முடியாது.

இன்றைய அரசாங்கங்களின் நிர்வாகப் பணிகள் பல்கிப் பெருகியுள்ளன. நிர்வாக ஒழுங்கமைப்பின்; பல நிலைகளிலும், பல மட்டங்களிலும் அதிகாரிகளும், ஊழியர்களும் உள்ளனர். இவை அனைத்தையும் ஒருமுகப்படுத்தி ஒழுங்கான ஒழுங்கமைப்புக்களின் கீழ் கொண்டு வர வேண்டும் அப்போது தான் அதிகாரமும், பொறுப்பும் சிறந்த முறையில் செயற்பட முடியும். ஆகவே நிர்வாக இயந்;திரத்தில் ஒழுங்கமைப்பு என்பது எல்லாவற்றிற்கும் அடிப்படையாகவுள்ளது எனலாம்.

ஒழுங்கமைப்பின் இயல்புகள்

அமைப்பினை உருவாக்குவதன் மூலம் நாம் மேற்கொள்ளும் கடமைகளைப் பலவாறு பிரித்து அவைகளுக்கு தனிப்பட்ட பண்பு நிலைகளைக் கொடுத்து பின்னர் அவற்றைச் சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தி ஒழுங்கமைப்பின்;; குறிக்கோள்களை அடைந்து கொள்ள ஒழுங்கமைப்பின் இரு முக்கிய இயல்புகள் துணை செய்கின்றன. அவைகளாவன படிநிலை ஒழுங்கமைப்பும், கட்டுப்பாட்டுவிசாலமுமாகும்.

1. படிநிலை ஒழுங்கமைப்பு

நிர்வாக ஒழுங்கமைப்பு பற்றிய கோட்பாடுகள் யாவும் மனித உறவினை அடிப்படையாகக் கொண்டவைகளேயாகும். ஒன்றோடு ஒன்று தொடர்புள்ள பல உட்பிரிவுகளையும், பகுதிகளையும் கொண்டு காணப்படும் நிர்வாக ஒழுங்கமைப்பில் பல பொறுப்புக்களைப் பெற்ற அதிகாரிகளும், ஊழியர்களும்; மக்களின் கடமைகளையும், மக்களுக்கிடையில் ஒழுங்குபடுத்தப்பட்ட பரஸ்பர உறவு நிலைகளையும் பேணிக் கொள்கின்றனர். இவ்வாறு இவர்கள் செயற்படும்போது கடமைகள் பிரித்து வகுக்கப்படுவதோடு, அதிகாரமும் பல வகையாகப் பிரித்து வழங்கப்படுகின்றது. இதன் காரணமாகவே ஒழுங்கமைப்;பின் வழியாகச் செயற்படும் ஊழியர்களிடையே மேல் நிலை, இடை நிலை, கீழ் நிலை என்னும் அதிகார உறவுகள் தோன்றுகின்றன.

நிர்வாக படிநிலை ஒழுங்கமைப்பு அடுத்தடுத்துள்ள அனேக படிகளால் தரத்தினை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டதாகும். இங்கு படிநிலைஒழுங்கமைப்பு வேறுபட்ட தொழிற்பாட்டு தொகுதிகளுக்குள் தொழிற்பகுப்பின் அடிப்படையில் பாரிய நோக்கத்துடனும், செயல்முறையுடனும் ஆரம்பமாகின்றது. இது அரசாங்கம் ஒன்றின் சேவைக்காக முழுமையான முகவர்களாகவும் (Agencies)திணைக்களங்களாகவும் பிரிக்கப்படுவதுடன், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மந்திரிசபை உறுப்பினர்களின் தலைமையின் கீழ் விடப்படுகின்றது.

நிர்வாக ஒழுங்கமைப்பின் கடமைகள் பிரித்து வகுக்கப்படுவதோடு, அதிகாரங்களும் பல்வேறாக பிரித்தளிக்கப்படுகின்றன. ஒழுங்கமைப்பின் உச்சியிலிருந்து பிறக்கும் அதிகாரம் சீராக பல பகுதிகளுக்கும் சென்று முடிவில் அதன் அடிமட்டத்திற்கு வருகின்றது. இவ்வாறு வரும்போது பொறுப்புள்ள பல நிலைகளையும், படிகளையும் அது கடந்து வருகின்றது போல் அடிமட்டத்தில் எழும் பிரச்சினைகள் பலவும், பலரால் தத்தம் பொறுப்பு நிலைகளுக்கு ஏற்ப பல அளவுகளிலும், வழிமுறைகளிலும் பகுத்தாராயப்பட்டு அவற்றிற்கான இறுதி தீர்வுகளுக்காக உச்சி நோக்கி செல்கின்றது. இங்கு படிநிலையமைப்பு என்பது கூர்ங் கோபுரத்தைப் போன்ற அல்லது பிரமிட் (Pyramid)போன்ற முக்கோண வடிவத்தினையுடைய படிநிலையமைப்பைப் பெற்றுவிடுவதனை அவதானிக்க முடிகின்றது.

அதிகாரம், கட்டளை, கட்டுப்பாடு ஆகிய மூன்றும் நிறுவனத்தின் தலைமை இடத்திலிருந்து அடிமட்டம் வரை பல நிலைகளைக் கடந்து அளவு வழி முறைகளுக்கு ஏற்ப கீழ் நோக்கி வருகின்றது. எனவே படிநிலை ஒழுங்கமைப்பு என்பது இடையூறின்றி தொடர்கின்ற அல்லது இடைவிடா வரிசை முறையான படிகளையும், நிலைகளையும் கொண்டு தரப்படுத்தப்பட்டுள்ள ஒழுங்கமைப்பு முறையாகும். மேல் நோக்கிச் சென்றாலும், கீழ் நோக்கிச் சென்றாலும் கட்டளைகளும் பொறுப்புக்களும்; ஒழுங்கமைப்பின் இடைப்பட்ட படிகளைத் தவிர்த்துத் தாவிச் செல்லுதல் கூடாது. இதனால் படிநிலைமரபு என்பது ஒழுங்கமைப்பின் முதுகெழும்பாக உள்ளது எனலாம்.

படிநிலை ஒழுங்கமைப்புமுறை பின்வரும் நான்கு அடிப்படையான கூறுகளைப் பெற்றிருக்க வேண்டும்.

  1. ஒவ்வொரு அலுவலரும் தமக்குக் கட்டளை வழங்கும் உடனடியான மேலதிகாரியாக ஒருவரைத்தான் பெற்றிருக்க வேண்டும்.
  2. ஒருவர் தன் பதவிக்கு கீழ் நிலையில் உள்ள ஓர் அதிகாரியிடம் இருந்து உத்தரவுகளையும், கட்டளைகளையும், ஆணைகளையும் பெறும் நிலை இருக்கக்கூடாது.
  3. மேல் நிலை, கீழ் நிலை அலுவலர்கள் தமது கண்ணோட்டத்திற்கும், கருத்திற்கும் உட்பட்ட வகையில்தான் தமது செயல்கள் மேற்கொள்ள வேண்டும். இடை நிலையில் உள்ள எவரையும் உதறித் தள்ளுதல் கூடாது.
  4. ஒழுங்கமைப்பிலுள்ள ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிற்கு ஏற்ப அதிகாரத்தினைப் பெற வேண்டும்.

நிர்வாகப் படிநிலை ஒழுங்கமைப்பின் முக்கிய இயல்புகளை பின்வருமாறு பட்டியல்படுத்தலாம்.

  1. முழு நிர்வாகச் செயற்பாடும் அடுத்தடுததுப் பகுதிகளாகவும், உப பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
  2. இந்தப் பகுதிகள் பிரமிட் வடிவத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
  3. ஒழுங்கமைப்பின் அதிகாரம், கட்டளை, கட்டுப்பாடு என்பன உச்சியிலிருந்து படிப்படியாக அடிமட்டம் வரை இறங்குகின்றன.

clip_image001

வரைபடத்தின்படி இங்கு A ஒரு தனிப்பகுதியாகும். இப்பகுதியானது முழுமையான அதிகாரங்களை தனக்குள் கொண்டுள்ளது. ஆனால் நிர்வாக ஒழுங்கமைப்பு தனது இலக்கினை அடையும் நோக்கில் அகன்ற B,C என்ற இரண்டு பகுதிகள் உருவாக்கப்படுகின்றன. இலக்குகளைப் பொறுத்து இவ்விரு பகுதிகளும் மேலும் சிறிய பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன. மேலும் வரைபடத்தில் B பகுதி இரண்டு பகுதிகளையும், C பகுதி ஒரு பகுதியினையும் D, E பகுதிகள் இரண்டு பகுதிகளையும் கொண்டிக்கின்றன. இப் பண்பு படிமுறை ஒழுங்கின் அடிமட்டமாகிய G,H,I,J வரை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. இங்கு பிரமிட் போன்று அடி அகன்று காணப்படும் படிநிலை அமைப்பின் ஒவ்வொரு பிரத்தியேக இடமும் குறிப்பிட்ட விடயங்களுக்கு ஒதுக்கப்பட்டவைகளாகும். அதிகாரத்தினை வைத்திருக்கும் மேல்மட்ட உத்தியோகத்தர்கள் கீழ் மட்ட உத்தியோகத்தர்களுக்கு கட்டளைகளை வழங்க அவர்கள் அதனை ஏற்று மேல் நிலையில் உள்ளவர்களின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடக்கின்றார்கள். இம்முறைமையின் கீழ் அரசாங்கத்தின் தலைவர் ஒவ்வொரு தனிப்பட்ட ஊழியரையும் ஒருவருக்குப் பின் ஒருவாராக ஐக்கியப்படுத்துகின்றார். எனவே படிநிலை ஒழுங்கமைப்பானது ஒழுங்கான படிமங்களையும், படிமுறையான கடமைகளையும் குறித்து நிற்கின்றது. நிறுவன ஒழுங்கமைப்பு மேலிருந்து ஆரம்பிக்கப்பட்டு அடிமட்டம் வiர் கட்டப்படுவதை எடுத்துக் காட்டுகின்றது. மாறாக ஒரு நிறுவனம் அடிமட்டத்திலிருந்து ஆரம்பித்து மேல் நோக்கியும் கட்டப்படலாம் அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப இக்கட்டுமான முறை அனுசரிக்கப்படும்.

நிர்வாகப் படிநிலைஒழுங்கமைப்பின் பயனாக ஆட்சிச் செயற்பாடுகள் பிரிக்கப்பட்டு தகுதியும். திறமையும் கொண்டவர்களால் பொது நிர்வாகம்; செயற்படுகின்றது. நிர்வாக அலுவலர்கள் பல மட்டங்களிலிருந்து புரியும் கடமைகள், அவற்றிற்கிடையே தோற்றுவிக்கப்படும் ஒழுங்கமைப்புக்கள், செயற்பாடுகள் இவற்றின் மூலம் பொதுக்கொள்கையினை நிறைவேற்றுதல் ஆகியவற்றிற்கிடையே சுமூகமான உறவுகளைக் கொண்டிருக்கும் ஒழுங்கமைப்;பானது, ஒழுங்கமைப்;பாளர்களுக்குப் பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றது. இவ்வகையில் ஒழுங்கமைப்;பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப்; பின்வரும் தந்திரோபாயங்கள் கையாளப்படுகின்றன.

  1. ஒழுங்கமைப்பிற்குரிய அடித்தளங்களையும், ஆதாரங்களையும் இனம்காணல்.
  2. அதிகார ஒப்படைப்பு.
  3. அதிகாரக்குவிப்பும், அதிகாரப்பரவலாக்கமும்.
  4. ஒருங்கமைந்த கட்டளை
  5. பணிஇணைப்பு

அமைப்பிற்குரிய அடித்தளங்களையும் ஆதாரங்களையும் இனம் காணுதல் :-

பொது நிர்வாகவியலில் ஒழுங்கமைப்பை உருவாக்குவதன் மூலம் அதன்; இலட்சியம் அடையப்படுகின்றது. ஒழுங்கமைப்பு தன்னுள்ளிட்ட பல பகுதிகள், பிரிவுகள், கிளைகள் வாயிலாக செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. இவ்வகையில் ஒழுங்கமைப்புக்களை உருவாக்குவதில் பின்வரும் அடித்தளங்களும், ஆதாரங்களும் பின்பற்றப்படுகின்றன.

குறிப்பிட்ட நோக்கம் அல்லது ஆட்சிச் செயற்பாடு:-

குறிப்பிட்ட பொதுக் கொள்கையின் கீழ் இயங்கும் அரசாங்கம் தனது இலக்கினை அடைந்து கொள்வதற்கும், அதன் மூலம் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் தனது செயற்பாட்டினை பல்வேறு பகுதிகளாகப் பிரித்து ஒழுங்குபடுத்துவதுடன், பிரிக்கப்படும் ஒவ்வொரு பகுதிகளையும் ஒழுங்குபடுத்திக் கொள்கின்றது.

குறிப்பிட்ட மக்களுக்குச் சேவை செய்தல்:-

ஒரு நாட்டின் பொது நிர்வாகச்; செயற்பாடு எல்லா மக்களுக்கும் பயன்பட வேண்டுமாயின், மக்களின் பண்பு நிலைமை, வாழும் சூழல் என்பவற்றைக் கருத்திலெடுக்க வேண்டும். மூன்றாம் மண்டல நாடுகளைப் பொறுத்தவரை நகரமயவாக்கமின்மையால் இந்நாடுகள் தமது பொது நிர்வாக ஒழுங்கமைப்பில் கிராமிய மக்களுக்கான தேவையினைப் பூர்த்தி செய்வதை முதன்மைப்படுத்துகின்றன.

புவியியல் வதிவிடம்:-

நிர்வாகத்தை செயற்படுத்தும் வகையில் நாட்டின் புவியியல் மையம், நிலப்பரப்பு மற்றும் பல்வேறு இடங்களின் சிறப்புத் தேவைகளுக்கு ஏற்ப ஒழுங்கமைப்;புக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சுக்கள் புவியியல் மையத்தினை முதன்மைப்படுத்தியே உருவாக்கப்படுகின்றன.

அதிகாரஒப்படைப்பு

பொது நிர்வாக ஒழுங்கமைப்புக்களிலுள்ள தலைவர்கள் யாவரும் தம் கீழ் நிலை அதிகாரிகளுக்குத் தேவையானளவு அதிகாரங்களைக் கொடுத்து, கீழ் நிலை அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்வதற்கு உதவுவதே அதிகாரஒப்படைப்பாகும். அதிகாரத்தை பிரித்து பகிர்ந்தளிக்கும் உயர்நிலை அதிகாரி, தம் அதிகாரத்தைப் பெற்று பணிபுரியும் கீழ்நிலை அதிகாரிகளை மேற்பார்வையும், கட்டுப்பாடும் செய்வதற்குரிய உரிமையினைப் பெறுகின்றார்.;

கீழ் நிலை உத்தியோகத்தர்களுக்கு சட்டத்தால் அல்லது அரசியலமைப்பால் நேரடியாக எவ்வித அதிகாரமும் வழங்கப்படுவதில்லை. இரண்டாம் நிலைகளிலும், கீழ் நிலைகளிலும் செயல்படும் அலுவலர்கள் நிறுவனத் தலைவரிடம் இருந்து அதிகார ஒப்படைப்பை பெறுகின்றனர். இவ்வகையில் அதிகார ஒப்படைப்பின் ஊற்றினை பின்வரும் மூன்று வகையில் இனங்காட்டலாம்.

  1. ஆட்சியியலுடன் (அரசியலமைப்பு) இணைந்த முறை:- அதாவது ஆட்சியியல் முறையில் தலைமை நிர்வாகிக்கு சட்டத்தால் வழங்கப்படும் அதிகார ஒப்படைப்பு (உதாரணம் - ஜனாதிபதி முறை)
  2. ஆட்சியியலுடன் இணைப்பற்ற முறை:- அதாவது ஆட்சியியல் முறையில் பல சுயேச்சையான பதவிகளுக்கும், ஆணைக்குழுவிற்கும் அதிகாரம் வழங்கும் முறையாகும் (உதாரணம் ஜனாதிபதி ஆணைக்குழு போன்றவை)
  3. ஆட்சியியலுடன் இணைப்பு முறை :- அதாவது அரசாங்கத்தின் ஒரு மட்டத்திற்குள் அல்லது ஒரு செயல் பிரிவிற்குள் ஆட்சியியல் அதிகாரத்தை ஒப்படைப்பதாகும். (பாராளுமன்ற முறை)

இம்மூன்று வகை அதிகார ஒப்படைப்பு மூலமும் ஓர் ஒழுங்கமைப்பின் கீழ் நிலை அலுவலர்களுக்கு அதிகாரங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. அதிகார ஒப்படைப்பினை செய்வதில் கீழ்க் காணும் வரம்புகளுக்குட்பட்டே அதிகாரிகள் செயலாற்ற வேண்டும்.

  1. உயர் அதிகாரிகள் யாவரும் தம் முழு அதிகாரங்களையும் பிறரிடம் ஒப்படைப்பு செய்யாது, தேவையானளவிற்கும், காலத்திற்கும் ஏற்பவே ஒப்படைப்பு செய்ய வேண்டும்.
  2. புதுக் கொள்கைகளையும், திட்டங்களையும் அனுமதிக்கும் அதிகாரத்தை அவர்கள் இழக்க கூடாது.
  3. உயர் மட்டஅதிகாரிகளை நியமனம் செய்யும் அதிகாரம் கண்டிப்பாக வேறு எவருக்கும் மாற்றம்; செய்யப்படக்கூடாது.
  4. உயர் அதிகாரி தனக்கு நேரடியான ஊழியர்களை மேற்;பார்வை செய்யும் அதிகாரத்தை வேறு எவர்க்கும் மாற்றக் கூடாது.

அதிகாரஒப்படைப்பில் இவைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறின் ஒழுங்கமைப்பின் தலைவர் அல்லது தலைமைக்குழு ஒழுங்கமைப்பின் செயல்களைக் கட்டுப்படுத்திக் குறிக்கோளை அடைய முடியாது போய்விடும்.

அதிகாரக்குவிப்பும் அதிகாரப்பரவலாக்கமும் .

ஒழுங்கமைப்பிலிருக்கும் உயர்நிலை கீழ் நிலை அதிகாரிகளிடையே தோன்றும் நிர்வாக உறவுகளின் காரணமாகவும், நிர்வாகத்தில் பல்வேறு கடமைகளையாற்றும் துறைகள், திணைக்களங்களுக்கு இடையேயுமான உறவு நிலைகள் வாயிலாகவும் அதிகாரக்குவிப்பும் அதிகாரப்பரவலும் என்ற அம்சம் தோற்றம்பெறுகின்றது.

ஒழுங்கமைப்பின் கீழ் நிலையிலுள்ள பிரிவுகளும், அவற்றின் தலைவர்களும், தமது விருப்பப்படி முடிவுகளை எடுக்காது, தாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் மேல்மட்டத்தில் வகுக்கப்படும் கொள்கைகள், மற்றும் பிறப்பிக்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்பவே மேற்கொள்வர்.

ஒழுங்கமைப்பு பேரளவானதாய் அமைந்து தமது அதிகாரத்தை பல மட்டங்களில் ஒப்படைத்து, செயல்களை முடிவெடுத்து ஆணைகளைச் சுயேட்சையாகப் பிறப்பிக்கும் வாய்ப்பினை அவற்றின் அதிகாரிகளுக்கு கொடுத்திருக்குமாயின் அவ் அமைப்பு அதிகார பரவலைப் பெற்றிருக்கும்.

ஒழுங்கமைப்பில் காணப்படும் முடிவெடுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் பொறிமுறையினைப் பொறுத்தே ஒழுங்கமைப்பின் அதிகாரக்குவிப்பும், அதிகாரப்பரவலும் எவ்வாறானது என்பதைத் தீர்மானிக்கமுடியும். பொதுவாக ஓர் அரசாங்கம் ஒரு முக அமைப்பை அல்லது ஒற்றையாட்சியைக் கொண்டிருக்குமாயின் அதன் ஆட்சியமைப்பு கூடுதலாக அதிகார குவிப்பை கொண்டிருக்கும் எனலாம். சமஸ்டி ஆட்சித் தன்மையினைப் பெற்றிருக்குமாயின் அதிகாரப்பரவல் முறையை கூடுதலாகக் கொண்டிருக்கின்றது எனலாம்.

ஒருங்கமைந்த கட்டளை

உயர் நிலையில் இருந்து தகுந்த ஆணைகளையும், கட்டளைகளையும் பிறப்பித்தே ஒழுங்கமைப்புத் தன் கடமைகளைச் செய்வி;க்கின்றது. ஒழுங்கமைப்பின் மூலம் பிறப்பிக்கப்படும் பல்வேறு கட்டளைகளையும்;, ஆணைகளையும்; பணிவுடன் ஏற்று செயல்படுவோர் பலராகும். எந்தவொரு ஊழியரும் தமக்கு உடனடி மேல்நிலையிலிருக்கும் அதிகாரியிடமிருந்தே கட்டளைகளைப் பெறவேண்டும். பலரிடமிருந்து ஒருவர் கட்டளைகளையும், ஆணைகளையும் பெறுவாராயின் அவற்றைச் செயற்படுத்துவதில் அவருக்குக் குழப்பம் ஏற்படும். ஊழியர்களை ஏவி கடமைகளைச் செய்ய வைப்பதில் ஒற்றுமை இருத்தல் அவசியமாகும். ஓர் அமைப்பின் அலகுகள் பலவாக இருப்பினும் அவற்றின் தலைமை நிர்வாகி ஒருவராகவே இருக்க வேண்டும். எனவே ஒரு நிறுவனத்தின் தலைமை ஒருவரிடமிருந்தாலும், பலரைக் கொண்ட ஒரு குழுவிடமிருந்தாலும் அவர்கள் பிறப்பிக்கும் ஆணைகளை ஊழியர்கள் ஏற்றுப் பணிபுரிவதில் குழப்பங்களைத் தவிர்க்க வேண்டும். ஒற்றுமைக்கட்டுப்பாட்டுத் தத்துவத்;தின் படி பலர் ஒருவருக்கு ஆணைகளை இடக்கூடாது. இவ்வாறு நிகழ்ந்தால் எல்லோரும் தம் பொறுப்புக்களை இலகுவாக உதாசீனம் செய்ய முடியும். எனவே. ஒவ்வொருவர் பொறுப்பும் குறித்ததோர், அதிகார வரம்பில் நிலை நிறுத்தப்பட வேண்டுமாயின் ஒற்றுமைக்கட்டுப்பாடு அவசியமானதாகும்.

பணிஇணைப்பு

ஒழுங்கமைப்பு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டும், அப்பிரிவுகளுக்;கேற்ப ஊழியர்கள் தெரிவு செய்யப்பட்டும், அவ் ஊழியர்களுக்கு ஏற்ற கடமைகள் பங்கீடு செய்யப்பட்டும் செயல்முறைப்படுத்தப்படுகின்றது. நிர்வாக ஒழுங்கமைப்பின் பிரிவுகளில் ஏற்படும் பிணக்குகள் ஒழுங்கமைப்பின் முழுமையினையுமே பாதிப்புறச் செய்யும். ஆகவே ஒழுங்கமைப்பிலுள்ள ஒவ்வொரு பிரிவுகளுக்குமிடையே கடமையும் ஒற்றுமையும் இருக்க வேண்டும.; இவ்வகையில் நிர்வாக ஒழுங்கமைப்பின் கடமைகளில் ஏற்படும் பிணக்குகளையகற்றி சிக்கலற்றவகையில் கடமைகளை மேற்கொள்வதற்;கு கடமைகளுக்கிடையில் கூட்டுப் பொறுப்பும், ஒற்றுமையும் இருக்க வேண்டும். இதனையே பணிஇணைப்பு என்கின்றனர்.

முழுமையான ஒருங்கிணைப்பையும், இயல்பையும் தோற்றுவிக்கும் சாதனங்களாகத் தலைமை நிர்வாகியின் தலைமையில் கூட்டப்படும் உயர் நிர்வாகிகளின் மகாநாடுகள், கீழ் நிலை நிர்வாகிகளின் கூட்டங்கள், திணைக்கழங்களுக்கிடையேயுள்ள குழுக்கள் போன்றவைகள் கூறுப்படுகின்றன. இதன்மூலம் ஒழுங்கமைப்பின் குறிக்கோள்கள் நிறைவேற்றப்படுகின்றன.

2. கட்டுப்பாட்டுவிசாலம்

சிறப்பான நிர்வாகத்தினை நடத்த வேண்டுமாயின் தேவையான அளவிற்கே ஊழியர்கள் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும். தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஊழியர்கள் இருப்பின் படிநிலைகளில் செயற்படுவோரைக் கண்காணித்துக் கடமைகளைச் செய்ய வைப்பதில் சிரமங்கள்; ஏற்படலாம். கட்டுப்பாட்டுவிசாலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அதிகாரியும் தாம் மேற்பார்வை செய்யக் கூடிய ஊழியர்களையே பெற்றுக்கொள்கின்றனர்.

பொதுவாக ஒழுங்கமைப்பின் ஒவ்வொரு படிகளிலும் கடமை புரியும் ஊழியர்களின் கட்டுப்பாட்டினை உறுதிப்படுத்த 5:1 என்ற விகிதாசாரம் பேணப்பட வேண்டும் எனக் கூறப்படுகின்றது. ஆனால் ஒழுங்கமைப்பின் அதி உயர் மட்டத்தில் இவ்விகிதாசாரம் தான் பேணப்பட வேண்டும் என்ற நியதி அவசியமற்றது கட்டுப்பாட்டு விசாலம் தோற்றுவிக்கும் மாற்றங்கள்; யாவும் ஒழுங்கமைப்பின் இயல்புகளுக்கு ஏற்பவும், ஒழுங்கமைப்பின் தலைமை நிர்வாகியின் ஆற்றலுக்கு ஏற்பவும் மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு அதிகாரியும் தமது கட்டுப்பாட்டுவிசாலத்தினை பணியாளர்களிடம் கொண்டு செல்வதற்கு எத்தனை அலுவலர்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதில் பொது நிர்வாகவியல் அறிஞர்களிடம் ஒத்தகருத்துக்கள் காணப்படவில்லை. உதாரணமாக சேர் கமில்டன் (Sir Hamilton) என்பவர் 'ஒவ்வொரு அதிகாரியும் மூன்று அல்லது நான்கு கீழ் நிலை அலுவலர்களையே பெற்றிருக்க வேண்டும்' எனவும், எல் உர்விக் (L.Urwick) என்பவர் ' மேல்மட்ட நிலையிலிருக்கும் மேற்பார்வை அதிகாரிகள் ஐந்து அல்லது ஆறு கீழ் நிலை அதிகாரிகளையும், வேலை எளிமையாயிருக்கும் கீழ் மட்ட நிலைகளில், ஒவ்வொரு அதிகாரியும் எட்டில் இருந்து பன்னிரெண்டிற்கு மேற்படாத கீழ் நிலையாளர்களை கொண்டிருத்தல் சிறப்பானதாகும்' எனவும், சேர் கிராகம் வொலாஸ் (Sir Graham Wallas)என்பவர் பத்து முதல் பன்னிரெண்டிற்கு மேற்படாத எண்ணிக்கையே கட்டுப்பாட்டுவிசாலத்திற்கு உகந்தது' என்று கூறுகின்றார்

அதிகாரிகளின் கட்டுப்பாடு, மேற்பார்வை, கவனம் ஆகியவற்றின் வீச்சிற்கு இலக்காகும் அலுவலர்களது எண்ணிக்கை எதுவாயினும் கட்டுப்பாட்டுவிசாலம் இன்றி நிர்வாகம் என்ற கருவி எந்நிலையிலும் செயற்பட முடியாது. இவ்வகையில் எவ் ஆட்சியமைப்பிலும் கட்டுப்பாட்டுவிசாலம் முக்கியம் பெற்று, ஓழுங்கமைப்பு நிறுவனமும், நிர்வாக அலுவலர்களும் தம் செயற்பாடுகளைச் சீராக்கிச் செய்து முடிப்பதற்கு கட்டுப்பாட்டுவிசாலம் முக்கியமானதாகின்றது.

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget